வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும்,வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி கோறிக்கை விடுத்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு முதல் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர்.கடந்த 22 வருட காலமாக அந்த மக்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை.இருந்த போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கின்ற படியால் எமது மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இருந்த போதும் இன்று அவர் எமக்காக முன்னெடுக்கும் இத்திட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு பெரும் பான்மை அரச அதிகாரிகளும்,அவர்களுடன் சேர்ந்து சில அமைப்புக்களும் பிழையான தகவல்களை வெளியிட்டுவருகின்றன.
சுற்றாடல் ஒன்றியம் என்ற அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாடு ஒன்றினை மேற்கோள்காட்டி சிற்கள நாளேடு ஒன்று செய்தியினை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வவுனியா மாவட் நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவரும் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அதில் தெரிவித்துள்ளதாவது.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தற்போது தமது மீள்குடியேற்றத்துக்கு வருகின்றனர்.அன்று மெனிக் பார்மில் இருந்த 3 இலட்சம் மக்களையும் அரசாங்கமும்,அமைச்சர் றிசாத் பதியுதீனும் மிகவும் குறுகிய காலத்துக்குள் மீள்குடியேற்றம் செய்தனர்.ஆனால் கடந்த 22 வருட காலமாக இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் காத்திரமான முறையில் இடம் பெறவில்லை.அதனை இன்று செய்ய முனையும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.மன்னார் மாவட்டத்தை பொருத்த வரையில் முசலி பிரதேசம் என்பது முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமாகும்.ஆனால் கடந்த காலத்தில் அந்த கிராமம் முழுமையாக விடுதலைப் புலிகளின் கடடுப்பாட்டில் இருந்தது.அங்கு எந்தவொரு முஸ்லிம்களும் வாழமுடியாத நிலை காணப்பட்டது.,அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் விரட்டப்பட்டனர் என்பதை ஊடக மாநாடுகளை நடத்துபவர்கள் மறைத்து,முஸ்லிம்கள் புதிதாக குடியேறுவதாகவும்,அவர்களுக்கு அரச காணிகளை பலாத்காரமாக பெற்றுக் கொடுப்பதாகவும் கூறிவருகின்றனர்.
விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அம் முஸ்லிம்களது காணிகளிலும்,வீடுகளிலும் தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.இன்று முஸ்லிம்கள் அங்கு செல்கின்ற போது அது தமிழ் மக்களின் வாழ்விடமாக காணப்படுகின்றது.இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுப்பு செய்வதில் உயர் பண்புகளை கொண்டவர்கள் என்பதால்,அங்குள்ள தமிழ் மக்களுடன் பிரச்சினைகளுக்கு செல்லாமல்,அவர்களும் வாழட்டும்,நாங்கள் வாழ்வதற்கும் இடம் கொடுங்கள் என்ற கோறிக்கையினையே முன் வைத்து வந்துள்ளனர்.
22 வருடங்களின் பின்னர் தமது தாயகத்துக்கு முஸ்லிம்கள் செல்கின்ற போது,வாழ்ந்த இடங்களில் பெரும்பாலான பகுதிகள் காடாக பெரும் மரங்களை கொண்டு காணப்படுகின்றது.இவற்றை துப்பரவு செய்ய முற்படுகின்ற போது,அரச காடுகளை அழிப்பதாக பிரசாரம் செய்கின்றனர்.யுத்த காலத்தின் போது எத்தனை ஆயிரம் எக்கர் நிலங்கள் பாதிக்ககப்பட்டன அப்போது பேசா மடந்தைகளாக இருந்த சுற்றாடல் அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீள்குடியேற முனைகின்ற போது,அதற்கெதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.இதுவும் ஒரு வகையான இனவாதிகளின் செயற்பாடுகள் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒட்டு மொத்தமாகமன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,
யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மாவட்டங்களில் 35ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற தயாராகவுள்ளன.அதில் 22 ஆயிரம் குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.அவர்கள் தங்களை மன்னார் மாவட்டத்தில் பதிவும் செய்துள்ளனர்.அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தையும் பெறாமல்,தமது மண்ணில் மீள்குடியேறியுமுள்னர்…இவர்கள் வீடின்றி,அடிப்படை வசதியின்றி படும் அவலத்தை இந்த இனவாத அமைப்புக்கள் ஏன் பார்ப்பதில்லை.இந்த மக்களையும் அவர்களது மண்ணில் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக தான் அமைச்சர் றிசாத் பதீயுதீன் அவர்கள் இரவு பகலாக பணியாற்றுகி்ன்றார்.
இவ்வாறான நிலையில் இனவாதத்தையும்,மத வாதத்தையும் துாண்டி தமிழ்-முஸ்லிம்-சிங்கள மக்களையும் பிளவுபடுத்துவதற்கு பல அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.அரசாங்கத்தின் காணிக் கொள்கையின் பிரகாரம்,அவசர தேவைகளுக்கமைய காணிப் பங்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அதனது நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டே இந்த காணிகள் வனபரிபாலன திணைக்களத்தாலோ,அல்லது பிரதேச செயலாளர்களாளோ வழங்கப்படுகின்றது.இந்த நடை முறைகள் மீறப்பட்டிருப்பின் அது குறித்து கவனம் செலுத்தப்படுவது நியாயமானதாகும்.
ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக பெறப்பட்ட காணிகளை அமைச்சர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கும் கருத்து முற்றிலும் அப்பட்டமான பொய்யாகும்.கொழும்பில் இருந்து கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் படும் அவலத்தை அறிந்து கொள்ள முடியாத அமைப்புக்கள் பொய்யான அறிக்கைகளை விடுவதை இனியும் தவிர்த்து இந்த நாட்டில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் அவர்களது தயாக மண்ணில் மீள்குடியேற்ற உதவி செய்ய முன்வருமாறு கோறிக்கை விடுப்பதாகவும் அப்துல் பாரி மேலும் தெரிவித்தார்.