Breaking
Sun. Jan 12th, 2025

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார்.

வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப்படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லலாமென, ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல், ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான ஆரம்ப நிகழ்வு ரம்புக்கன, கலகெதர, கலேவல மற்றும் குருணாகலை ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இடம்பெறும்.

‘செங்கட தொரட்டுவ’ என்னும் கண்டி அதிவேகப் பாதைக்கான ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியினால் இன்று காலை 10 மணிக்கு கலகெதரவிலும் 11.30 மணிக்கு ரம்புக்கனையிலும் இடம்பெறும்.

இதேவேளை ‘சிலுமினி தொரட்டுவ’ எனப்படும் வடக்கு அதிவேக பாதைக்கான ஆரம்ப நிகழ்வு அன்றையதினமே மாலை 2.30 மணிக்கு கலேவெல பிரதேசத்தில் ஜனாதிபதியினால் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதன் தொடர்ச்சியாக கட்டுவனவில் இடம்பெறும். அன்றைய தினமே மாளிகாபிட்டியவில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.

உள்ளூர் ஒப்பந்தக்காரர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் முதலாவது அதிவேகப் பாதை இதுவாகும். முழுத் தூரத்தில் 60 வீதத்தை உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந் நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

300 பில்லியன் ரூபா செலவில் நான்கு பிரிவுகள் நிர்மாணிக்கப்படும்.

இந்த அதிவேகப் பாதையில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கலாம்.

முதல் கட்டம் 42-45 மாதங்களுக்குள் பூர்த்தி பெறுமென்று பெருந்தெருக்கள், துறைமுக, கப்பற்துறை அமைச்சின் செயலர் ரன்ஜித் பிரேமசிரி தெரிவித்தார்.

அத்துடன் இதற்கு இணையாக கண்டி பிரதான பஸ்தரிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூடங்கள் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படுவதுடன் கடைத் தொகுதிகள் அகற்றப்பட்டு பஸ் நிலைய சுற்றுச் சூழல் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

கண்டி வைத்தியசாலையின் முன் புறமும் காபர் இட்டு அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

பொல்கொல்லையில் பிரமாண்டமான சகல வசதிகளும் கொண்ட கலை அரங்கு கேட்போர் கூடத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு பல்வேறு வகைகளிலும் கண்டி அவசர அவசரமாக அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

-தினகரன்-

Related Post