வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் 98 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
கண்ணிடி வெடிகளை அகற்றுவதற்காக சுமார் 80 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் மாத்திரமே எஞ்சியுள்ளது என்று தெரிவித்த அவர், இவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில்,
புலிகளுடனான யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கு, கிழக்கில் சுமார் 5000 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதென இனங்காணப்பட்டது.
இதனையடுத்து இந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களை துரிதமாக மீளக்குடியமர்த்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை இராணுவம் மற்’றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டன.
இதற்கமைய இராணுவத்தினர் 68 பிரதேசத்திலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் 32 பிரதேசத்திலும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர்.
இதன்படி அடையாளங் காணப்பட்ட 5000 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திலிருந்து 98 சதவீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் தற்பொழுது 80 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திலிருந்து மாத்திரமே கண்ணிடிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள சிறிய அளவிலான நிலப்பரப்பிலிருந்து எஞ்சியுள்ள கண்ணி வெடிகளையும் அகற்றும் பணிகளை இராணுவத்தினரும் அரச சார்பற்ற நிறுவனத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரி வித்தார்.
சர்வதேச தரத்திற்கமையவே கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்றும் மேலும் தெரிவித்தார்.
(TK)