Breaking
Tue. Dec 24th, 2024

வடக்கு – கிழக்கு தமிழ்மொழி மாநிலத்திற்கென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விதந்துரைத்துள்ள ஒரு நீண்ட காலத்துக்கான தீர்வு தேவையென்ற போதிலும், அதற்கு இன்னும் ஒரு படிமேலே சென்று நீடித்து நிலைக்கத்தக்கதான ஒரு நிரந்தர தீர்வை அடைவதற்கு வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து இயங்கவேண்டுமென முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் (எம்.என்.ஏ) தலைவர் எம்.ஐ.எம்.ஸெயின் கூறினார்.

முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே மேற்படி கூறினார்.

அவர் இங்கு தொடர்ந்து கூறுகையில் – பிரிவினை வாதம் வழக்கொழிந்து போனதற்குப்பின்னரும், பயங்கரவாதப் பூச்சாண்டிகாட்டி மீண்டும் பதவிக்குவர ஆலாப்பறக்கும் மஹிந்த கண்டாயக்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒரு முடிவு கட்ட இந்தத் தேசிய அரசாங்கம் வடக்கு- கிழக்கு தமிழ் மொழி மக்களின் அபிலாஷைகளுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை முன்மொழிந்து, அங்கீகாரம் பெற்று சட்டமாக்க முன்வரவேண்டும்.

நல்லாட்சி என்பது வெறும் சொல்லாட்சியாகப் போய்விடாமல் தேசிய அரசாங்கம் ஆட்சியில் தனது பாதங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டதும், பொருளாதார சுபீட்சத்துக்கும், சமூகங்களுக்கும் மத்தியிலான நல்லிணக்கப் புரிந்துணர்வுக்கும், சகலருக்குமான சம அந்தஸ்து, சந்தர்ப்பங்களுக்கும் வழிவகுத்துச் செல்லும் சமகாலத்தில், வடக்கு கிழக்கு தமிழ் மொழி மாநில தமிழ், முஸ்லிம் மக்களுக்கான அதிகார அலகு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான காத்திரமான பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து, வடக்கு கிழக்கு மூன்று சமூகங்களுக்கும் திருப்தியடையும் வகையிலான கௌரவமான தீர்வுப் பொதியை முழு நாடும் பெருமைப்படும் வகையிலும், சர்வதேசத்தின் பாராட்டைப் பெறும் வகையிலும் முன்மொழிந்து சட்டமாக்கி நடைமுறைப்படுத்த தாராள மனதுடன் முன்வரவேண்டும்.

தமக்கு தேவையானவை எவை என்பதில் தமிழர்கள் தெளிவாகவும், நுணுக்கமாகவும் இருந்த போதும், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமக்குப் பொருத்தமான அரசியல் அலகு, அரசியல் பரவலாக்கம் தொடர்பாக இன்னும் அரிச்சுவடி அறிவோடுதான் இருக்கிறார்கள் என்பதை மிகுந்த வெட்கத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களில் கணிசமான அதிகாரத்திற்கு வந்துள்ள மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளும், கட்சி அரசியலைப் புறத்தொதுக்கி முஸ்லிம் சமூக விடுதலையில் முத்துக் குளித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் புத்திப் போராளிகளும், அரசியல் ஞானிகளும் காலமாகிப்போன தமது தீர்வுப் பிரேரணைகளைத் தூசி தட்டி எடுத்து, புதிய வெளிச்சத்தில் புடம் போட்டு முஸ்லிம்களுக்கான அலகு, அதிகாரம் பற்றிய அபிப்பிராயங்களை முஸ்லிம் பொது மக்களுக்கு முன்வைத்து புதிய தீர்வுத்திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

எதுவுமே தெரியாமல், எதையுமே செய்யாமல் செக்கு மாடுகள் போல அரைத்த மாவை அரைத்துக் கொள்பவர்களாய், பேரினவாதத்தின் பிலாக்கங்களுக்குப் பக்கப் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பதே பரம சுகம் என்று இன்னும் இருக்காமல், வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த, உயர்ந்த வாழ்வை உறுதிப்படுத்த காலதாமதமின்றி முன்வரவேண்டும் என்றும் கூறினார்.

முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் செயலாளர் நாயகம், கலைக்கப்பட்ட வட கிழக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சித் தலைவர், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் உரையாற்றும் போது – வடக்கு கிழக்கு தமிழ்மாநில அதிகார அலகு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான தமது முன்னணியின் ஆலோசனைகளை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விரைவில் வைக்கப்படும் என்று இந்த நல்லாட்சியியை ஏற்படுத்துவதில் தமிழர்களுக்கு சமமாக முஸ்லிம்களுக்கும் வாக்களித்ததையும் முஸ்லிம்கள் நினைவிலிருத்தி செயற்படுவது சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

Related Post