தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் நிரந்தர தீர்வுக்காக ஒன்றுபட்டிருக்கும் நிலையில் அந்த இலக்கு ஒருபோதும் தோல்வியடைந்து விடக்கூடாது எனத் தெரவித்துள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியூதீன் அந்த இலக்கை அடைவதற்காக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதை எவராலும் தடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் சமாதானம் ஏற்படவேண்டும் என்பதற்காக எனது தலைமையிலன அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. குறிப்பாக அந்த இலக்குடன் 2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு நாம் ஆதரவளித்து செயற்பட்டோம். தொடர்ந்து 2010ஆம் ஆண்டும் இந்த ஜனாதிபதி ஆட்சிப்பீடமேறுவதற்கு ஆதரவளித்த பிரதான முஸ்லிம் தரப்பாக நாமே காணப்படுகின்றோம்.
ஆனால் அந்த வெற்றியின் பின்னர் தாமே இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உருவெடுத்தது. அதற்காக சட்டங்களை ஏற்படுத்த முனைந்தார்கள். ஒரு நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு காணப்படவேண்டிய நீதி, நிர்வாக, ஊடக துறைகளில் அதிகாரத்தின் ஊடான தலையீடுளை மேற்கொண்டார்கள்.
தமக்குச் சார்பாக செயற்படுபவர்களை உயர் பதவிகளுக்கு நியமித்தார்கள். சுயாதீனத்தை முற்றாக ஒழித்து அடக்குமுறைக்குள் கொண்டு சென்றார்கள்.
இவற்றுக்கு எல்லாம் அப்பால் இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளதளவிற்கு இனவாதத்தை கையிலெடுத்தார்கள். அதன் மூலம் சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை தமது அடிமைகளாக வைத்திருக்க வேண்டுமென்றே விரும்பினார்கள். பள்ளிவாசல்கள் முதல் உண்ணும் உணவு, உடுக்கும் உடை என அனைத்திற்கும் எதிராக போர்க்கொடி தூக்கிகொண்டு செயற்பட ஆரம்பித்தனர். இதனை தடுக்குமாறு நாம் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்துகொண்டு பேராடினோம். எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் எதற்குமே பொறுப்புடன் பதிலளிக்கவில்லை.
அவ்வாறான நிலையிலேயே எந்தவொரு முஸ்லிம் கட்சியும் எதிரணியில் இணையாத நிலையில் பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் எமது பதவிகள் அனைத்தையும்துறந்து முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து வெளியேறினோம். இந்நிலையில் இன்று ஜனாதிபதி முதல் அனைவரும் என்னை மேடைகளில் இலக்கு வைத்து விமர்சனம் செய்கின்றார்கள். அதன் உண்மைத்தன்மையை மக்கள் அறிந்துள்ளார்கள்.
அண்ணன் சம்பந்தன் தலைமையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ரவ+ப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என அனைத்துமே நல்லாட்சியொன்று உருவெடுப்பதற்கான ஓரணியில் திரண்டுள்ளன. அவ்வாறிருக்கையில் நாம் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றிணைந்திருப்பதாக பிரசாரம் செய்கின்றார்கள். புலிகளை உருவாக்கப்போவதாக கூறுகின்றார்கள். புலிகளை அழித்துவிட்டோம் எனக் கூறியவர்கள் இன்று புலிகள் தொடர்பாக அதிகம் பேசுகின்றார்கள்.
தோல்வியினை உணர்ந்துள்ளவர்கள் இனங்களுக்கிடையே இனவாதக் குரோதத்தை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலையில் உள்ளார்கள். 13 பிளஸ் எனக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியவர்கள் தற்போது வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காது முடக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக முனைப்புக் காட்டுகின்றனர்.
இவ்வாறான நெருக்கடி நிலையில் தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை நாம் மீண்டும் இழந்து விடக்கூடாது. ஊழல் மோசடி மிக்கதும், சிங்களவாதம் மிக்கதுமான இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிந்து அகற்றி நல்லாட்சிக்கா அணிதிரள வேண்டும். கடந்த காலங்களில் வடக்கு மக்களின் ஜனநாயக கடமைகளை மேற்கொள்ளவிடாது தடுத்தார்கள். ஆனால் இம்முறை நியாயமான தேர்தலொன்று நடைபெறுவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களின் அதிகார பிரயோக, கபடத்தனமான முயற்சிகள் வெற்றியளிக்கப்போவதில்லை. அதேநேரம் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பை தடுக்கப்போவதில்லை. அந்த வாக்குகள் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்காத்தினை ஆட்சிப்பீடத்தில் அமர்த்துவதை உறுதிசெய்வதாக அமையும் என்றார்.