வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் புத்தளத்தின் சில பிரதேசங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற கஷ்டங்களையும் அவதிகளையும் கவனத்திற்கெடுத்து, முறையான திட்டங்களை வகுத்து நீர்ப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமிடம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,
வவுனியா மாவட்டத்தில் சாளம்பைக்குளம், ஆண்டியாபுளியங்குளம், பாவற்குளம், மற்றும் வவுனியா தமிழ்க் கிராமங்கள், வவுனியா வடக்குப் பிரதேசம் ஆகியவற்றிலும் மன்னார் மாவட்டத்தில் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, முள்ளிக்கண்டல், அளக்கை ஆகிய ஊர்களிலும் சன்னார், ஈச்சளவக்கைக் கிராமங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற அவதிகள் சொல்லொணாதவை.
அத்துடன் புத்தளத்தில் கரம்பை, கரத்தீவு, ஹிதாயத் நகர், எருக்கலம்பிட்டி மக்கள் அதிகமாக வாழும் நாகவில்லு, தில்லையடி பிரதேசங்களில் நீர்ப்பற்றாக்குறையினால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.
புத்தளத்தில் வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களும் உள்ளூர் வாழ்வதால் நீர்ப்பிரச்சினை பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. எனவே இதற்கான முறையான திட்டங்களை வகுத்து உங்கள் பதவிக்காலத்திலேயே இந்தப் பிரச்சினையை தீர்த்துத் தருமாறு நாம் அன்பாக வேண்டுகின்றோம்.
உங்கள் அமைச்சுக்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னப்பட்டு அழிவடைந்து போன எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பிரதேசத்தில் சிறு சிறு நகரங்களை அமைத்து அந்தப் பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு நீங்கள் உதவுங்கள்.
அத்துடன் 25 வருடங்களாக அழிந்து போய்க்கிடக்கும் முசலிப் பிரதேசத்தை நகரக்கட்டமைப்புக்குள் கொண்டு வந்து அந்தப் பிரதேசத்தின் மேம்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும் உதவுமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தாங்கள் அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சிலாபம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏடிபி-5 எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பல மில்லியன் டொலர் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டம் தற்போது நிறைவடையும் நிலையில் இருக்கின்றது. தாங்கள் அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் மேலும் இந்தத் திட்டத்தை மெருகூட்டி சில செயற்பாடுகளை மேற்கொண்டமைக்கு நான் இந்தச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.