வட பகுதி மீனவர்களுக்கு தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால், தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களை கட்டுப்படுத்த, நிரந்தரப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
கடந்த மூன்று தசாப்தகாலமாக யுத்தத்தின் பிடிக்குள் வாழ்ந்து, கடலில் சுயாதீனமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாதிருந்த மீனவர்கள், யுத்த காலத்தில் கடற்படையினரினதும், ஆயுததாரிகளினதும் கெடுபிடிக்குள் பல்வேறு அபாயங்களின் மத்தியில் தமது தொழிலை மேற்கொண்டு வந்தனர். குறிப்பிட்ட கடல் எல்லைக்கு அப்பால் சென்று தொழில் செய்ய முடியாத வகையில், பாதுகாப்புப் படையினரின் கடல் எல்லைச் சட்டங்கள் தடுத்தன.
யுத்தம் முடிவுற்ற பின்னரும், இந்த அநியாயங்கள் இப்போது வேறுவடிவில் வந்து சேர்ந்துள்ளன. வட மாகாணத்தின் கடல் வளத்தை வேறு மாவட்ட மீனவர்களும், தென்னிலங்கை மீனவர்களும் சட்டவிரோதமான முறையில் சூறையாடிச் செல்வதை, இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில், நாம் கண்டிப்பதுடன், எமது கவலையையும் தெரிவிக்கின்றோம்.
வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல தடவை மீன்பிடித் துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் நாம் முறையிட்டுள்ள போதும், காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை.
மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களிலும் ஏகமனதாக முடிவுகள் இது தொடர்பில் எடுக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ள போதும், அவர்களும் ஓரவஞ்சனையாகவே செயற்படுவதாகத் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்த போது, இந்தப் பிரச்சினை எடுத்துக்கூறப்பட்டது.
இப்போது தென்னிலங்கை மீனவர்களால், நாயாறு மீன்வாடிகள் எரித்து நாசமாக்கப்பட்டு, அப்பாவி மீனவர்களுக்கு துன்பம் நேர்ந்துள்ளது. எனவே, நாசகாரச் செயலில் ஈடுபட்டவர்களின் மீது சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறும், இந்தப் பிரச்சினை மீண்டும் தொடராத வண்ணம் நிரந்தரப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் எனப் பொலிஸ்மா அதிபரிடம சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ரிஷாட், இந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-ஊடகப்பிரிவு-