-எப்.சனூன்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி அபிவிருத்திக்கு பொறுப்பாளரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை இணைத்தலைவராகக் கொண்டு இயங்கி வரும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி தனது திட்டங்களைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.
யுத்தத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலணி, மீள்குடியேற்றக் கிராமங்களில் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அதற்கு முன்னேற்பாடாக வன்னியில் உள்ள கிராமங்களுக்கு, மீள்குடியேற்றச் செயலணியின் பணிப்பாளர், பொறியியலாளர் யாஸீனின் தலைமையிலான தொழில்நுட்பக் குழு விஜயம் செய்து, பயனாளிகளை இணங்கண்டு வருவதோடு, வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில், மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 206 பயனாளிகளுக்கும், மாந்தை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 108 பயனாளிகளுக்குமான வீட்டுத்திட்ட வேலைகளை முன்னெடுப்பதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், நானாட்டான் பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மீள்குடியேற்ற செயலணியின் திட்டப்பணிப்பாளர் பொறியியலாளர் யாஸீன், பொறியியலாளர் சிபா, உதவி பொறியியலாளர் மாஹிர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம சேவக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.