வடக்கில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழுவொன்றை அமைக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களுக்கு, 5543 வீடுகளும், முஸ்லிம்களுக்கு, 16,120 வீடுகளும் தேவைப்படுவதாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கூட்டாகச் சமர்ப்பித்த அமைச்சர்கள், சுவாமிநாதன், ரிசாத் பதியுதீன், முஸ்தபா ஆகியோர், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பொருத்தமான வழிமுறைகளை அடையாளம் கண்டு, நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும், அமைச்சர்கள் மட்டக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதற்கமைய, தலைமையில் குழுவொன்றை அமைப்பதென்றும், அதில் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை உள்ளடக்குவதென்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.