வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வலி நிறைந்த வாழ்க்கையின் 30 ஆண்டுகள் மற்றும் மீள்குடியேற்றத்தின் 10 ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
வெளியேற்றத்தில் அழிவடைந்த சொத்துக்களுக்கு எவ்வித நஷ்டஈடோ இதுவரை கௌரவமான மீள்குடியேற்றமோ இல்லாத நிலையில் வடக்கு முஸ்லிம்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
யுத்த காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து விடுதலைப்புலிகள் தீர்மானித்தார்கள். இப்போது வடக்கு நிர்வாகத்தினர் திட்டமிட்டு முடிவுகட்டி வருகின்றனர்.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வாக்காளர் இடாப்பு புதுப்பிக்கப்படும். 1990 இல் அகதியாக வெளியேற்றப்பட்ட போது எனக்கு 16 வயது. 18 வயதில் வாக்காளராக பதிவு செய்யப்படும் தகுதி இருந்தும் 28 வயதிலேயே வாக்காளரானேன். என்னைப் போலவே பல்லாயிரக்கணக்கான வடக்கு முஸ்லிம்களும் தசாப்தம் கடந்து வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டனர்.
யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படவோ முடிவுறுத்தப்படுவது தொடர்பான தெளிவான கொள்கை நடைமுறையோ இதுவரை இல்லை.
காணி, வீடு, நஷ்டஈடு என எதுவும் முழுமைப்பட முடித்து வைக்கப்படவில்லை. அதனால் மீள்குடியேற்றம் இன்னும் 50 வீதத்தைக் கூட அடையவில்லை.
இத்துரதிஷ்டமான சூழ்நிலையில் இன்னும் மீள்குடியேறாமல் புத்தளம் மற்றும் இதர மாவட்டங்களில் வாழும் வடக்கு முஸ்லிம்கள் ஒரு முடிவுக்கு வர நிர்ப்பந்திக்கப்படுவதாக அறிய முடிகிறது.
இவர்கள் தமது சொந்த மண்ணில் வாழ விருப்பம் கொண்டிருப்பினும் பல்வேறு பிணைப்பு, சிக்கல் காரணமாக ஒரு பகுதியினர் புத்தளம் மாவட்டம் உட்பட தாம் வாழும் மாவட்டங்களிலேயே தம்மை நிரந்தர வாக்காளராகப் பதிவு செய்து கொண்டனர்.
இன்னும் பெரும் பகுதியினர் விரைவில் படிப்படியாக மீள்குடியேறும் எண்ணத்தில் தமது வாக்காளர் பதிவை வடக்கில் வைத்துக் கொண்டு புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
சென்ற வருடம் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வந்த 6 இடம்பெயர்ந்த மாணவர் பாடசாலைகள் வடமாகாண நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் நிரந்தரமாக உள்வாங்கப்பட்டு விட்டன.
அடுத்து புத்தளம் மாவட்டத்தில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்கி புத்தளம் மாவட்டத்தில் அவர்களை நிரந்தரமாகப் பதிவுசெய்து விடும் வேலைத்திட்டம் மிகக்கவனமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது.
நிரந்தர வதிவிடமும் வாக்காளர் பதிவும் ஒரு பிரஜையின் உரிமையையும் விருப்பத் தெரிவும் ஆகும்.
புத்தளம் மாவட்டத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கவும் வாக்குப்பதிவைக் கொண்டிருக்கவும் விரும்புகின்ற மன்னார் மாவட்ட மக்கள் பகுதி பகுதியாக வருடாந்தம் வாக்காளர் பதிவை புத்தளத்திற்கு மாற்றி வருகின்றனர். அது இயல்பாக இடம்பெறுவதாகும்.
ஆனால் மன்னாரில் வாக்குப்பதிவைக் கொண்டு படிப்படியாக மீள்குடியேற புத்தளத்தில் காத்திருப்போரை புத்தளம் மாவட்ட வாக்காளராகப் பதிவு செய்ய மன்னார் நிருவாகம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட மறைமுக நிகழ்ச்சி நிரல் அநியாயமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
2019 ஜூன் வாக்காளர் இடாப்பு புதுப்பிப்பின் போது மன்னார் மாவட்ட பதிவுக்கு விண்ணப்பித்தவர்களின் ஒரு தொகை விண்ணப்பங்களும் உரிமைக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு மாற்றமாகவும் பலவந்தமாகவும் புத்தளம் மாவட்ட பதிவில் உட்படுத்தப்பட்டனர்.
குறிப்பாக முசலிப் பிரதேசத்தின் கரடிக்குளி, முசலி ஆகிய கிராமங்களின் நூற்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு இவ்வித அநியாயம் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு பெரும் துயரம் யாதெனில் மன்னாரில் நிரந்தரமாக மீள்குடியேறி, வீடுகட்டி வாழ்ந்து கொண்டும் அரச உத்தியோகம் செய்து கொண்டும் பிள்ளைகளை அப்பாடசாலைகளில் படிக்கச் செய்து கொண்டும் இருப்போரின் வாக்குப் பதிவையும் கூட புத்தளம் மாவட்டத்தில் சேர்த்துள்ளமையாகும்.
தற்போதைய நிலையில் கொரோனா நிவாரணமாக 5,000 ரூபாவை புத்தளத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கென அவர்கள் தொடர்பாக புத்தளம் கிராம சேவகர்களின் அறிக்கையை வட மாகாண மாவட்டச் செயலகங்கள் பெற்றுக் கொண்டுள்ளன. அதில் வாக்காளர் தொடர் இலக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ள.
5,000 ரூபா கிடைக்குமோ இல்லையோ குறித்த அறிக்கைகளைக் கொண்டு 2020 ஜூன் அல்லது அதன் பின்னர் புதிய வாக்காளர் இடாப்பின் போது குறிப்பிட்ட அனைவரும் புத்தளம் மாவட்டத்தில் பதியப்படவிருப்பதாகவே அறிய முடிகிறது.
இவ்விதம் பதிவு செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு சாதக, பாதகங்கள் இருக்கின்ற போதிலும் அம்மக்களின் வேண்டுகோள் அல்லது விருப்பம் பெறப்படாமல் அவ்விதம் செய்வது மனித மனங்களை வதைக்கும் ஒரு முறையற்ற செயலும் மனித உரிமை மீறலுமாகும்.
2017 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க (2017 ஜூலை 21 ஆம் திகதி) வாக்காளர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் கூட உள்நாட்டில் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது சொந்த மண்ணில் வாக்குப்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கிறது. (4 ஆண்டுகள் செல்லுபடியாகும்)
குறித்த சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆள் என்பதை வரைவிலக்கணப்படுத்தும் போது ‘இலங்கையில் நிரந்தரமாக வதிந்தவரும் பயங்கரவாதி, போராளி அல்லது ஒரு குழுவினரின் ஏதேனும் நடவடிக்கையின் விளைவாக 2009 மே 18 ஆம் திகதிக்கு முன்னரான எந்நேரத்திலும் தமது நிரந்தரமான வதிவிடத்தை விட்டுச் செல்வதற்கு வலுக்கட்டாயப் படுத்தப்பட்டவரும் அல்லது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டவரும் தமது தொடக்க வதிவிடத்திற்கு வெளியே இலங்கையில் நிரந்தரமாகத் தொடர்ந்து வதிபவருமான இலங்கைப் பிரஜையொருவர்’ எனக் கூறுகிறது.
வட மாகாண முஸ்லிம்கள் தாம் விரும்பி தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறியவர்கள் அல்லர். அவர்களை கௌரவமாகவும் கண்ணியமாகவும் மீள்குடியேற்ற வேண்டியது வட மாகாண நிருவாகத்தினரதும் இலங்கை அரசினதும் கடமையாகும்.
எந்தவொரு சமூகத்துக்கும் அநியாயம் இழைக்கும் நோக்கில் திரைமறைவில் மனிதர் சூழ்ச்சிகள் செய்கின்ற போதிலும் அதில் இறைவன் நலதை நாடியிருக்கலாம்.