-சுஐப் எம் காசிம்
வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்தனர்.
வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமான, பொய்யான பிரசாரம் தொடர்பிலும், வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தப் போவதான ஜனாதிபதியின் அறிவிப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புகள் குறித்தும் விளக்கும் செய்தியாளர் மாநாடு இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என் எம் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான ஏ எச் எம் பௌசி, ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம் எச் எம் நவவி, மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷத், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஷாத் சாலி, ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறியதாவது,
1990 ஆம் ஆண்டு புலிகளால் அடித்து விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது பரம்பரைக்காணிகளில் குடியேறும் போது இனவாதிகளும் இனவாதச் சூழலியலாளர்களும் அவர்களை கொடுமைப்படுத்துகின்றனர். தமது சொந்தக் காணிகளில் வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளை அழித்துக் குடியேறும்போது வில்பத்தை அவர்கள் அழிக்கின்றார்கள் என்றும் இவர்கள் கூக்குரல் இடுகின்றனர். அப்படியானால் அவர்கள் கள்ளத்தோணிகளாக வந்தவர்களா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ, கொண்டுவரப்பட்டவர்களா? அப்படியில்லையென்றால் அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களா? சூழலியலாளர்களிடம் இவற்றைக் கேட்கின்றேன்.
26 வருடக்களாக தென்னிலங்கையில் மூன்று பரம்பரையாக வாழும் இவர்கள் உடுத்த உடையோடு நிர்க்கதியாக வந்தவர்களே என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர்கள் வாழ்ந்த காணிகள் பல்வேறு வழிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. அங்கு வாழ்ந்தோர் அவர்களின் காணிகளில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். இன்னும் சில காணிகள் புலிகளினால் சூறையாடப்பட்டு மாவீரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எஞ்சியிருக்கும் காணிகளில் குடியேறும் போது தான் இனவாதிகளின் கொடுமை தாங்க முடியவில்லை.
புலிகளின் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்காததாலேயே அவர்கள் வெளியேற்றப்பட்டனர். புலிகளுடன் ஒத்துப் போயிருந்தால் அவர்களுக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது. அரசாங்கமும், சகோதர சிங்கள மக்களும், மீள்குடியேற்றத்திற்கு தடை போடும் இனவாதிகளும் இந்த உண்மையை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். யதார்த்தத்தை விளங்காது இனவாதிகள் அமைச்சர் ரிஷாட்டும் முஸ்லிம்களும் காடுகளை அழிப்பதாக கூப்பாடு போடுகின்றனர்.
முஸ்லிம்கள் வில்பத்துக் காட்டை ஆக்கிரமிப்பதாக ஒரு பிரமையை ஏற்படுத்தி சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு பிழையான கருத்தை விதைத்து வரும் இனவாதச் சூழலியாலாளர்களும், ஊடகங்களும் வவுனியா மாவட்டத்திலுள்ள வன பரிபாலனத் திணைக்களத்திற்கு உரித்தான கலாபோகஸ்வெவ பிரதேசத்தில் அம்பாந்தோட்டையிலிருந்து மக்களைக் கொண்டுவந்து வீடமைத்துக் கொடுத்து, தொழில் வழங்கி, அங்கு குடியமர்த்தி ’’நாமல் கம’’ என்ற கிராமமாக அதனை ஆக்கியிருப்பதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கின்றனர்.
வில்பத்துக் காடழிப்புத் தொடர்பில் முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாட்டையும் குற்றஞ்சாட்டி வரும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கு இந்த விடயங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா? அல்லது இவர்கள் போன்ற அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இனவாதச் சூழலியலாளர்கள் தொழிற்படுகின்றனரா? இந்தச் சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இங்கு கூறியதாவது,
முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினையை அரசாங்கம் ஒரு சமூகத்தின் பிரச்சினையாகவோ, அல்லது ஒரு சாராரின் பிரச்சினையாகவோ கருதாமல் தேசியப் பிரச்சினையாக பார்க்க வேண்டும், இந்த விடயங்களில் அரசுக்கே நிறையப் பொறுப்புகள் உண்டு. முஸ்லிம்களாகிய நாம் ஈழம் கேட்கவில்லை எங்களை, எங்களது சொந்த இடங்களில் நிம்மதியாக வாழவிடுங்கள்.
’ஒட்டாரா குணவர்த்தன” போன்றவர்கள் எவருடைய பின்புலத்தில் செயற்படுகின்றார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளில் தெளிவாக விளங்குகின்றது. வில்பத்துப் பிரச்சினையில் மூக்கை நுழைத்துள்ள டலஸ், உதய கம்மன்பில போன்றவர்கள் அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றார்கள் என்பது அவர்களது இனவாதக் கருத்துகளிலிருந்து புலப்படுகின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் ஓரிடத்திலிருந்து அமர்ந்து பேசி முஸ்லிம்களின் பிரச்சினைக்களுக்கு முடிவு கட்ட வேண்டும். தற்போது பொது பல சேனாவும் மகிந்த அரசின் முக்கியஸ்தர்களும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் மாறி மாறி வெளியிடும் கருத்துக்கள் எங்கள் சமூகத்தை அவர்கள் எப்படி பந்தாடியிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்குப் போதுமானது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது,
வடமாகாண முஸ்லிம்கள் அகதிகளாக தென்னிலங்கையில் வாழ்ந்த காலத்திலே அவர்கள் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை, வன வள அதிகாரிகள் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி ஜி பி எஸ் முறையின் கீழ் கொழும்பில் இருந்து கொண்டு வர்த்தமானிப் பிரகடனம் செய்தனர். இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இந்தப் பிரகடனம் மேற்கொண்ட விடயம் 2015 ஆம் ஆண்டு தான் வெளியே தெரிய வந்தது.
முசலிப் பிரதேச சபைக்குட்பட்ட, மருதமடு கிராம சேவகர் பிரிவிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2800 ஹெக்டேயர் காணிகளை வன பரிபாலனத் திணைக்களம் விளாத்திக்திக்குளம் என்ற பெயரில் பிரகடனப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்தப் பிரதேசமக்களின் பிரதிநிதி என்ற வகையில் கடந்த அரசாங்கத்தில் நாம் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவினாலேயே அவர்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டது. 2800 ஹெக்டேயர் காணிகளை இழந்த அந்த மக்களுக்கு ஆக 208 ஹெக்டேயரே வழங்கப்படிருக்கின்றது. புலிகளினால் அநீதி இழைக்கப்பட்ட இந்த மக்களுக்கு கடந்த அரசின் இந்த நடவடிக்கைகள் மேலும் அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளன. நொந்து போன இந்த மக்கள் மீளக் குடியேறும்போது இனவாதிகள் இவ்வாறு மீண்டும் கொடுமைப்படுத்துகின்றனர்.
2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகின்றோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழக புவியியற் துறைப் பேராசிரியர் நவ்பல் வில்பத்து தொடர்பாகவும் முசலி முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கினார்.