தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும்,மதவாதத்தையும் பேசுவதாகவும்,ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடக்கு மக்கள் வசந்தத்தை அனுபவிக்க வேண்டுமெனில் எமது அணியுடன் அணி திரவள்வதே தான் இன்றைய தேவையென்றும் கூறினார்.
மன்னார் தாராபுரத்தில் இன்று மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார்.
மேலும் அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது –
இன்று எமது மக்கள் அனுபவித்துவரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு எமது நன்றியினை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த மாகாண சபைத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.யுத்தம் ஏற்படுத்திய அழிவுகள் இன்று அகன்று சென்றுள்ளதை காணமுடிகின்றது.இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் எமது மாவட்டம் கண்டிருந்த பின்னடைவுகள் இன்று அகன்று சென்றுள்ளது.
மன்னார் மாவட்டமானது கல்வித் துறையிலும்,இன்னோரன்ன துறைகளிலும் தேசிய மட்டத்தினை நோக்கி சென்றுள்ளது.இதற்கு காரணம் மக்கள் மாவட்ட அபிவிருத்தியின் மீது கொண்டுள்ள அளளப்பறிய பற்றாகும்.இதனை தொடர்ந்து நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த எம்மால் முன்னெடுக்கப்படும் பணிகளை சிலர் திரிவுபடுத்தி இன ரீதியான சிந்தனையினை மாவட்டத்தில் விதைக்கின்றனர்.ஆனால் எம்மால் வழங்கப்பட்ட சமுர்த்தி நியமனங்கள்,சிற்றுாழியர் நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களிலும் எந்த வித இனபாகுபாடுகளையும் நாம் காண்பிக்கவில்லை.அதற்கு இம்மாவட்ட மக்கள் சான்றாக இருக்கின்றனர்,அதே போல் தான் எனது பணிகளும் இனம்,மதம்,பிரதேசம் கடந்து தேவயுற்ற மக்களுக்கு சென்றடைகின்றது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.