Breaking
Sun. Dec 22nd, 2024

-நேர்காணல் :- உவகை நேசன் –

கேள்வி : வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டுமென்று குரல் எழுப்பப்படுவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : மாகாணங்கள் ஒன்பதாக பிரிக்கப்பட்ட போது, வடக்கு ஒரு மாகாணமாகாவும், கிழக்கு இன்னுமொரு மாகாணமாகவும் வரையறுக்கப்பட்டது. பாரம்பரியமாக நீண்ட காலமாக இந்த நிலைப்பாடே இருந்து வந்தது. 1987 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் மாகாணசபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறையின் கீழ் இந்திய அரசின் அழுத்தங்களால் வடக்கு,கிழக்கு நிபந்தனையுடன் இணைக்கப்பட்டு வடக்கு, கிழக்கு ஒரே மாகாணமாக கருதப்பட்டு, மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றது. எனினும், இந்த இணைப்பினால் நாம் பட்ட கஷ்டங்களை இங்கு நான் விரிவாகக் கூற விரும்பவில்லை. கிழக்கு மாகாண மக்களின் கருத்துக்கள் அறியப்படாமல் குறிப்பாக, அங்கு வாழும் இன்னுமொரு சமூகமான முஸ்லிம் சமூகத்தின், எந்த அபிலாஷைகளும் கருத்திற்கெடுக்கப்படாமல் இவ்விரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டதே வரலாறு.

மக்களின் விருப்பு வெறுப்புக்களை கருத்திற்கெடுக்காது இணைக்கப்பட்ட இந்த மாகாணங்களை, மீண்டும் பிரிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் மனுதாரர்களுக்குச் சாதகமாக, தீர்ப்பளித்ததனால், தற்போது இந்த மாகாணத்தின் நிர்வாகங்கள் வெவ்வேறாக இடம்பெற்று வருகின்றன. கிழக்கு மாகாணத்திலே, சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் ஏறத்தாழ சமனான இனப்பரம்பலிலேயே வாழ்கின்றனர்.

தற்போதைய நிலையில் வடக்கிலே தமிழ் மகன் ஒருவர் முதலமைச்சராக விளங்குகின்றார். கிழக்கிலே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார். மூவினங்களும் வாழும் கிழக்கு மாகாண அமைச்சரவையிலே அந்தச் சமூகத்தவரின் பிரதிநிதிகள், அமைச்சர்களாக பணி புரிகின்றனர். இனரீதியான பாகுபாடின்றி, இன சௌஜன்யத்தோடு கிழக்கு மாகாணத்திலே சுமூகமான ஆட்சி ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சி நல்லாட்சிக்கு முன்னோடியாகவும் திகழ்கின்றது.

இந்த நிலையில் வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைப்பதற்கான தேவைதான் என்ன? அவ்வாறு இணைக்கப்படுவதன் மூலம் ஒரேயொரு முதலமைச்சரே பணியாற்ற வேண்டிய நிலை வரும். அவர் விரும்பியோ விரும்பாமலோ ஒரு சமூகத்தைச் சார்ந்தவராக மட்டுமே இருப்பார். இந்த நிலையில் அடுத்த சமூகத்தவருக்குரிய வாய்ப்பு அங்கே அடிபட்டுப்போகும் சந்தர்ப்பம் உண்டு. இவ்வாறான பல்வேறு காரணங்களால் வடக்கு,கிழக்கு தற்போது இருப்பது போன்றே இருக்க வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

கேள்வி : வடக்கு, கிழக்கை பிரிப்பது தொடர்பில் முஸ்லிம்களின் கருத்து என்னவாக இருக்கின்றது?
பதில் : எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் தற்போது உள்ளது போன்று, பிரிக்கப்பட்டே இருக்க வேண்டுமென்ற ஆணித்தரமான நிலைப்பாட்டில் இருக்கின்றது. அதே போன்று வடக்கு, கிழக்கு இணைப்புக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்கவும்மாட்டோம் என்பதை பொறுப்பான கட்சித் தலைவன் என்ற வகையில் வெளிப்படையாகக் கூறுகின்றேன்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பல்வேறு சமூக நலம் சார்ந்த இயக்கங்களும் வடக்கு – கிழக்கு இணைப்பை ஆதரிக்கமாட்டோம் என பகிரங்கமாக மேடைகளில் பேசியும், அறிக்கைகளின் மூலமும் தெரிவித்து வருகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த விடயத்தில் “மதில் மேல் பூனையாக” இருப்பதன் மர்மம் விளங்கவில்லை. நான் வடமாகாணத்தில் பிறந்திருந்தாலும் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றேன்.

கேள்வி : அரசினால் அண்மையில் தாபிக்கப்பட்ட மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணியின் செயற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன?
பதில் : யுத்தகாலத்திலே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தென்னிலங்கையிலும், ஏனைய இடங்களிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களும் யுத்தத்தின் கோரத்தைத் தாங்க முடியாது இடம்பெயர்ந்தனர். யுத்தத்தின் ஆரம்பகாலங்களில் சிங்கள மக்களும் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர். வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக அடித்து விரட்டப்பட்டனர். புத்தளம், குருநாகல், அனுராதபுரம், நீர்கொழும்பு, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் அவர்கள் அகதிகளாகவே இன்னும் வாழ்கின்றனர்.

சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமது பூர்வீக இடங்களில் குடியேற இவர்கள் விருப்பம் கொண்டுள்ள போதும், பெரும்பாலானோருக்கு தமது பாரம்பரிய பிரதேசங்களில் குடியேறுவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன. காணிப்பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் இருக்கின்றன. சொந்த நிலக்காணிகள் 25 ஆண்டுகளிலும் காடாகிவிட்டன. சில இடங்களில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை, கொழும்பிலிருந்து கொண்டு ஜி பி எஸ் தொழில்நுட்பம் மூலம் வனபரிபாலனத் திணைக்களம் தமக்குச் சொந்தமென வர்த்தமானிப் பிரகடனம் செய்துள்ளது. சொந்தக் காணிகளை நாம் துப்புரவு செய்யும் போது, இயற்கை வளங்களை நாசமாக்குவதாக இனவாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இவர்களை மீளக்குடியேற்றுவது எனது தார்மீகக் கடமையாகும். ஏச்சுக்கள், பேச்சுக்கள் அபாண்டங்களுக்கு மத்தியில் நான் இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். எனினும், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி நேரிடுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரிடம் இந்த மக்களின் அவல நிலையே நாம் பலதடவை சுட்டிக்காட்டியதன் விளைவே, இவ்வாறான செயலணி ஒன்று உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இந்த செயலணியை எமக்கு அமைத்துத் தந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அகதி மக்களின் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

இந்த செயலணியில் இணைத்தலைவர்களாக அமைச்சர்களான சுவாமிநாதன், பைசர் முஸ்தபா, துமிந்த திசாநாயக்க மற்றும் நானும் பணியாற்றுகின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். நாம் பலதடவைகள் கூடி, அகதி மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பில் ஆராய்ந்து, திட்டங்களை வகுத்துள்ளோம். வெகுவிரைவில் இதன் பணிகள் வேகமடையுமென நம்புகின்றேன்.

கேள்வி : வடமாகாண சபை இந்தச் செயலணிக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளதே!
பதில் : வடமாகாணசபை “வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுகின்றது”. சுமார் 03 வருடகாலம் பதவியில் இருக்கும் வடமாகாண சபை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு துளியளவும் உதவவில்லை. அவர்கள் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு ஒரு மலசலகூடத்தையேனும் அமைத்துக் கொடுக்கவில்லை என்பது வேதனையானது. இந்த செயலணியை நாங்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கென அமைக்க எண்ணியபோது, தமிழ் மக்களின் குடியேற்றத்தை தாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், அரசின் உயர்மட்டத்திடம் சுட்டிக் காட்டியதாக அறிகின்றோம்.

எனவேதான், வடக்கிலே பாரம்பரியமாக வாழ்ந்த சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் முறையாக மீள்குடியேற்றுவதற்காக இந்த செயலணி அமைக்கப்பட்டது. குடியேற்றத்தை திட்டமிட்டு, வெற்றி பெறச்செய்து மக்களுக்கு உச்சப்பயனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் செயலணியை, அவர்கள் எதிர்ப்பதன் அர்த்தம் எமக்குப் புரியவில்லை.

கேள்வி : புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில் : எந்த மாற்றத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நல்லாட்சியைக் கொண்டு வருவதில் சிறுபான்மையினரின் பங்களிப்பு அபரிமிதமானது. குறிப்பாக, முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் நூறு சதவீதம் ஆட்சி மாற்றத்துக்கு உதவியவர்கள்.

கடந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்தவர் மீது இழைக்கப்பட்ட கொடூர இனவாதப் போக்கின் காரணமாகவே, அவர்கள், அந்த அரசை தூக்கியெறிய வேண்டுமென எண்ணினர். ஜனநாயக வழியில் தமது வாக்குப் பலத்தை பிரயோகித்தனர்.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளிலும், ஒப்பந்தங்களிலும் முஸ்லிம் சமூகம் கிள்ளுக் கீரையாகவே கணிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அபிலாஷைகள் கருத்திற்கெடுக்கப்படாததால் அந்த சமூகம் இன்னும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. எனவே, அதிகாரப் பகிர்விலோ, தேர்தல் முறை மாற்றங்களிலோ முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தேர்தல் முறை மாற்றத்தில் சிறுபான்மை கட்சிகளுக்கோ, சிறு கட்சிகளுக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கட்சிகளுடன், நாம் இணைந்து பணியாற்றுகின்றோம். அடிக்கடி சந்திப்புக்களையும் நடத்துகின்றோம். பேரினக் கட்சிகளின் நன்மைக்காக எங்களை துரும்புச் சீட்டாக எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதை அன்பாய் வேண்டுகின்றோம்.

கேள்வி : உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு உங்கள் தலைமையில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் உங்கள் பங்களிப்பு எத்தகையது?

பதில் : மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் எங்களுடன் பல தடவை ஆலோசனை நாடாத்தியதன் பின்னர், எங்களது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், இந்த மாநாட்டை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இடம்பெறாதிருந்த இந்த இலக்கிய மாநாடு, டிசம்பர் மாதம் 10,11,12ஆம் திகதிகளில் நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

எழுத்தாளர்களை, கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும், சர்வதேச எழுத்தாளர்களுடன் நமக்குள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இது உதவுமென நம்புகின்றேன்.

By

Related Post