-சுஐப் எம் காசிம்
வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்த அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும் சகோதர முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து எதிர்கட்சித்தலைவர் கொண்டு வந்த ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது,
சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு அவர்களது மனக்கிடக்கைகளையும் உள்ளத்து உணர்வுகளையும் அடக்கியதன் வெளிப்பாட்டினாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தனி நாடு கேட்டு போராடினார். அந்த இளைஞர்களின் போராட்டங்களுக்கு அந்த சமூகம் சார்ந்த அரசியல் தலைவர்கள் உத்வேகம் அளித்தனர். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோர் பல பிரிவுகளாக பிரிந்து பல்வேறு பிளவுகளை தமக்குள் ஏற்படுத்தி பிரச்சினைப்பட்டனர். இந்த வரலாற்று உண்மைகளை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
இவ்வாறான போராட்ட கால கட்டத்தில் ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்த சகோதர இனத்தை எதிரிகள் போலப் பார்த்த துர்பாக்கிய நிலையும் இருந்தது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது ஆரம்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்களும் கொடூரங்களும் விரவி வடக்கு மாகாணத்தில் 5% இற்கும் குறைவாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீதும் பரவியது. அவர்களை ஒட்டு மொத்தமாக சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டமையும் கரை படிந்த வரலாறு. அவ்வாறான அகதிச் சமூகத்திலிருந்து எம் பியாகிய நான் எனது சொந்தத் தொகுதியான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உள்ளடங்கிய வன்னிக்கு சென்று பணி புரிய முடியாது இன்னொரு மாவட்டத்தில் இருந்து கொண்டு பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகினேன்.
கடந்த அரசில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது முல்லைத்தீவிலிருந்து அகதியாக ஓடி வந்த 3 இலட்சம் தமிழ் மக்களை சகோதர வாஞ்சையுடன் அரவணைத்து முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இராணுவத்தரப்பின் உதவியுடன் முடிந்தளவு வசதியை செய்து கொடுத்தோம்.
யுத்தம் முடிந்த பின்னர் அரசாங்கத்தின் கொள்கைக்கிணங்க அகதி முகாமில் வாழ்ந்த தமிழ் மக்களை கௌரவமாகவும் ஓரளவு நிம்மதியாகவும் சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதற்காக அத்தனை நடவடிக்கைகளையும் மனச்சாட்சியுடன் மேற்கொண்டிருக்கின்றேன்.
பழைய அகதிகளான சிங்கள, முஸ்லிம் மக்களை தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நிறைவடைந்ததன் பின்னர் குடியேற்றலாம் என நம்பிக்கைக் கொண்டிருந்தேன். எனினும் எதிர்பாராத விதமாக வேறு அமைச்சின் பொறுப்பு எனக்கு தரப்பட்டது.
இந்த அரசோ, இதற்கு முன்னர் இருந்த அரசோ முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் நியாயமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றேன்.
மீள்குடியேற்ற அமைச்சர்களாக வந்தவர்கள் எமது பிரச்சினைகளைப் பாராது தூங்கிக்கொண்டிருந்தனர். நல்லாட்சி அரசிலாவது மீள்குடியேற்ற அமைச்சு கிடைத்திருந்தால் இந்த மக்களின் வாழ்க்கையை சீர்ப்படுத்தியிருக்க முடியும். எனினும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற கட்சி மீள்குடியேற்ற அமைச்சுப் பொறுப்பை வழங்க வேண்டாம் என கூறுகின்றார்கள் என நாட்டுத்தலமைகள் என்னிடம் சொன்னார்கள்.
இந்த அரசுப்பதவிக்கு வந்து ஒரு வருடம் கழிந்த பின்னரும் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் எதுவுமே நடக்காதிருந்த போது மீள்குடியேற்ற அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை பலமுறை சந்தித்து பேச்சு நடத்தியன் விளைவினாலேயே மீள்குடியேற்ற செயலணி பிறந்தது. எனினும் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திலே எதுவிதமான அக்கறையும் காட்டாதிருந்த வட மாகாண சபை முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் செயலணியை செயற்பட விடமாட்டோம் என வக்கிர உணர்வுடன் கூறினார் என்பதை மிகவும் கவலையுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற 2900 குடும்பங்கள் சென்ற போதும் அவர்கள் காணியில்லாத காரணத்தினால் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. 10 கிராமங்களில் முன்னர் வாழ்ந்த அவர்களில் 400 குடும்பங்களே தமது பழைய காணிகளில் வாழ்கின்றனர். இவர்களுக்கென 250 ஹெக்டேயர் ஒதுக்கப்பட்ட போதும் இவர்களுக்கென 10 பேர்ச் காணிகள் கூட கொடுக்காது இழுத்தடிப்பு செய்யப்படுகின்றனர். இற்றைவரை 6 முறை அவர்களுக்குக் காணிக்கச்சேரி நடத்தப்பட்டுள்ளது. அரசாங்க அதிபரிடம் கேட்டால் ”அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்’ என்று கூறுகிறார். அதே போல யாழ்ப்பாணத்தில் குடியேறிய 3000 குடும்பங்களில் 2400 குடும்பங்கள் திரும்பிவிட்டன. குடியேறியுள்ளோருக்கு வடமாகாண சபை ஒரு மலசல கூடத்தைத் தானும் இதுவரை அமைத்துக் கொடுக்கவில்லை.
யாழ்ப்பாணம் பரிச்சல்வெளி என்ற இடத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி இருக்கின்றது. அதனையாவது பிரித்துக் கொடுங்கள் என அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்த போதும் எதுவுமே நடக்கவில்லை.
அதிகாரப்பகிர்வில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து அதிகபட்ச அதிகாரம் கேட்பவர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கின்றனர்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாமும் அக்கறை காட்டியே வருகின்றோம். எனினும் எந்த ஓர் அதிகாரப்பகிர்வும் எந்த ஓர் இனத்தையும் பாதிப்படையச் செய்யாது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதே போன்று வட மாகாண சபையும் முஸ்லிம்களின் விடயத்தில் கரிசணை காட்ட வேண்டும். எங்களது சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அரை மணித்தியாலம் கூட ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கு அவர்களின் மனம் ஒப்பவில்லை.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசாங்க அதிபர் மக்பூலை 25 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொன்றார்கள். அதன் பிறகு இன்றுவரை இந்த சமூகத்திலிருந்து ஒரு அரசாங்க அதிபரை நியமிக்க மறுக்கிறார்கள். எனவே இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றுமாறு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரை நான் வேண்டுகின்றேன் என அமைச்சர் கூறினார்.