Breaking
Sun. Nov 17th, 2024

20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கில் அமைதிச் சூழல் ஏற்பட்டதனால் மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்திற்கு மக்கள் வந்தபோது இந்தப் பிரதேசம் இருந்த நிலைமை, அப்போது வந்த மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். அவர்கள் வாழ்ந்த காணிகள் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தும் கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் தகர்ந்தும், இடிந்தும், உருக்குலைந்தும் கிடந்தன. முசலிப் பிரதேசத்திலுள்ள அத்தனை கிராமங்களும், ஒன்றுடன் ஒன்று காடுகளால் பின்னப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருந்தன. மொத்தத்தில் இந்தப் பிரதேசம் இருளடைந்த பூமியாக வெறிச்சோடிக்கிடந்தது. 

எங்கே குடியேறுவது? எப்படி குடியேற்றுவது? எதிலிருந்து குடியேற்றத்தை ஆரம்பிப்பது? என்று எதுவுமே தெரியாது விழித்தவர்களாக நாம் இருந்தோம். எங்கு பார்த்தாலும் போரின் அடையாளங்கள், அதன் எச்சசொச்சங்களான கண்ணிவெடிகள். நிலவெடிகள் புதைக்கப்பட்ட சான்றுகள். மொத்தத்தில் அந்தப் பிரதேசம் உயிர் அபாயத்தை எச்சரித்துக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் எதுவும் வெடிக்கலாம். இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியிலேதான் மீள்குடியேற்றத்தை தொடங்க வேண்டியிருந்தது.

சொந்தபூமியிலே மீளக்குடியேற வேண்டுமென்ற ஆசை மட்டுமே இருந்ததே தவிர, அதற்கான கட்டுமானங்களோ, வாழ்க்கைக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளோ அப்போது இருக்கவில்லை. முன்னர் வாழ்ந்த பூமிக்கு மீளத்திரும்ப வேண்டுமென்று பலர் விரும்பியிருந்த போதும், அதற்கான சூழல் இருக்கவில்லை. 20 வருடங்களுக்கு மேலாக, தென்னிலங்கை கிராமங்களுடன் பின்னிப்பிணைந்து, வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்க்கையையும் உறவையும் விட்டு, ஓரேயடியாக இந்த மக்கள் எப்படி வருவது? என்ற நிலை. அகதியாக வாழ்ந்த இடங்களில் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கைக்கு இடப்பட்ட உறுதியான அடித்தளங்கள், பிள்ளைகளின் நிலையான கல்வி. இதற்கு மத்தியிலேதான் சொந்தபூமிக்கு திரும்பி வாழ வேண்டுமென்ற ஆசையும் ஆதங்கமும் ஏற்பட்டது. 

எனினும், எஞ்சிய காலங்களில் தமது சொந்தக் கிராமங்களில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியுமா?  என்ற ஏக்கமும், அவர்களை வாட்டாமலில்லை. அதுமட்டுமன்றி, மீளக்குடியேற எத்தனிக்கும் பிரதேசங்களில், வாழ்வதற்கான முக்கிய தேவைகளான மின்சார வசதியில்லை, நீர்வசதியுமில்லை. வாழ்க்கைக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளுமே இல்லாத ஒரு நம்பிக்கையற்ற சூழலில்தான்,  ஏதோ ஓர் உந்துதலில், பாரம்பரிய பூமியிலே, வாழ்ந்தேயாக வேண்டுமென்ற ஒரேநோக்கில் குடியமர முன்வந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் எமக்கிருந்த அரசியல் பலமும், மக்களைக் குடியேற்ற வேண்டுமென்ற நல்லெண்ணமும் ஆர்வமும், அகதி மக்களின் குடியேற்றத்திற்கு உதவியது. எங்களால் முடிந்த அத்தனையையும் செய்தோம். வந்தவர்களுக்கு  ஆரம்பத்தில் கொட்டில்களை அமைத்துக் கொடுத்தோம். பின்னர், படிப்படியாக வீடுகள், பாடசாலைகள், கட்டிடங்கள் என்றெல்லாம் எமது பணிகள் வியாபித்து நின்றன. மாடிக்கட்டிடங்களை கூட கட்ட முடிந்தது. அப்போது இந்தப் பிரதேசத்தில் எங்குமே மின்சாரம் இருக்கவில்லை. 04 ஆம் கட்டை தொடக்கம் அரிப்பு வரையும்,  சிலாவத்துறை தொடக்கம் மறிச்சிக்கட்டி வரையும் உள்ளடங்கிய அத்தனை கிராமங்களிலும் ஓங்கி வளர்ந்திருந்த காடுகளையும் மண்புதர்களையும் துப்புரவாக்கியும், கட்டிட இடிபாடுகளை அகற்றியுமே மக்கள் வாழக்கூடிய உகந்த சூழலை ஏற்படுத்தினோம். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினோம். அபிவிருத்திப் பணிகளை படிப்படியாகத் தொடங்கினோம். வீடுகளை கட்டினோம். இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளாக அவை விரவி நிற்கின்றன. எவருமே நினைத்துப் பார்த்திராத வகையில், இறைவனை முன்நிறுத்தி இந்தப் பணிகளை செய்து வருவதனால், இறைவன் தொடர்ச்சியாக எமக்கு உதவி வருகின்றான். அத்துடன், கடந்த அரசில் எமக்கிருந்த அதிகாரமும், அரச உயர்மட்டத் தலைவர்களுடனான நெருக்கமான தொடர்புமே இவற்றையெல்லாம் எம்மால் சாதிக்க வழிகோலியது..

அதே போன்று, அகதி மக்கள் தென்னிலங்கையில் புத்தளம் உள்ளடங்கிய பல பிரதேசங்களில் கஷ்டப்பட்டதை நிதர்சனமாக உணர்ந்தவர்கள் நாங்கள். அகதி முகாம்களிலே சகோதர அகதிகளுடன் பிணைந்து, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த காரணத்தினால், அரசியல் மூலமே இந்த துன்பங்களுக்கு விடிவுகட்ட முடியுமென்ற எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது.

அந்தவகையில், நல்ல இறையெண்ணத்துடனும், தூய சிந்தனையுடனுமே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்ததனால், தொடர்ச்சியான வெற்றிகளை எம்மால் பெறமுடிந்தது. புத்தளம் கரம்பையிலே அரச காணிகளிலே குடியமர்ந்து, அன்றாடம் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கின்ற மக்களின் அவலக்குரல்களை ஒருமுறை கேட்கமுடிந்தது. நாங்கள் அந்தப் பிரதேசத்திற்கு அரசியல் செய்ய சென்ற போது, அங்குள்ள தாய்மார்கள், தமது வாழ்விடத்திற்கான காணி உறுதிப்பத்திரம் இல்லையெனவும் அவற்றைப் பெற்றுத்தருமாறும் வேண்டினர். வீடுகளைக் கட்டித்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இறைவனை முன்நிறுத்தி அதற்கான வாக்குறுதிகளை வழங்கினோம். 

எனினும், இதனை நிறைவேற்றுவதற்கான சக்தி எம்மிடம் இருக்கின்றதா? என்ற கேள்வி இருந்தது. அதனை கற்பனை பண்ணிக்கூட எம்மால் பார்க்க முடியாமல் இருந்தது.  தேர்தலில் வெற்றிபெற்றோம். அதிகாரமும் கிடைத்தது. தேர்தல் காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆகவேண்டும். அந்தக் காலகட்டம் ஐனாதிபதி சந்திரிகாவின் அரசாங்கம். இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நெருடல் மனதில் இருந்ததனால், அவரிடம் நேரடியாகச் சென்று உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தேன்.

நாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 32 மில்லியன் டொலர் நிதியுதவி, உலக வங்கியின் உதவியுடன் கடனாகப் பெற்றுத் தரப்பட்டு, அந்த அரசாங்கத்தில் எனக்கிருந்த அமைச்சுக்கு கீழே ஒதுக்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு புத்தளத்திலே வீடமைப்புத்திட்டங்களை ஆரம்பித்தோம். இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களுக்கான அத்திவாரம் இந்த முயற்சியிலிருந்து தான் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டது.

புத்தளம் பிரதேசத்திலே ஆயிரக்கணக்கான வீடுகளை இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கட்டிக்கொண்டிருந்த போது, புதிய பிரச்சினை ஒன்று பூதாகாரமாக எழுந்தது. புத்தளம் நகரத்திலே எனது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கடைகளை மூடி ஹர்த்தால்களை அனுஷ்டித்தனர். சகோதர முஸ்லிம்களுக்கிடையே நச்சு விதைகள் பரப்பப்பட்டன. இவ்வாறான சதிகளையும், தடைகளையும் தாண்டியே, நாங்கள் எமது முயற்சிகளைத் தொடர்ந்தோம். மக்களுக்கு வீடுகளை கொடுக்கும் போது, தமக்கு கிடைக்கவில்லையே என்று, எனது ஆதரவாளர்களும், உதவி செய்தவர்களும் மனக்குறைபட்டனர். எனினும், எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி, நாம் இந்த செயற்பாடுகளை மேற்கொண்டோம். எனக்கு அரசியல் ரீதியில் உதவி அளித்தவர்கள் பலர், தமக்கு வீடு கிடைக்கவில்லையே என்று என்னைவிட்டு தூரச்சென்ற சம்பவங்களும் உண்டு. தகுதியானவர்களுக்கு தராதரம் பாராது நாம் உதவி செய்திருக்கின்றோம். இதனால் அரசியலில் சில பாதிப்புக்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. எனினும், இறைவனின் திருப்தி எமக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கையில், எனது அரசியல் பயணத்தை தொடர்ந்தேன்.

மைத்திரிபால சிறிசேன ஐனாதிபதியாக வருவாரா? வரமாட்டாரா? என்று எல்லோரும் சந்தேகத்துடனும், ஏக்கத்துடனும் பரபரப்பாக இருந்தவேளை, முஸ்லிம் சமுதாயம் அவரது வெற்றிக்காக ஒன்றுபட்டிருந்தது.

இந்த நிலையிலே, மன்னார் மாவட்டத்திற்கு வந்து எமது ஆதரவாளர்களையும், கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்து, கலந்துரையாடல்களை நடத்தினோம். கருத்துக்களைக் கேட்டறிந்தோம். அப்போது கல்வியியலாளர்கள் சிலர் மாறவேண்டாம். எது நடந்தாலும் பரவாயில்லை. இருக்கும் இடத்தில் இருங்கள்” என்று அன்பாக வேண்டினர். “மஹிந்த அரசு நமக்கு காணி தந்தது. நமது மக்களை குடியேற்ற உதவியுள்ளது. பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. எனவே நீங்கள் போகவேண்டாம். உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம்” என்று வேண்டிக்கொண்டனர்.  எனினும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி, சில அதிர்ச்சியான முடிவுகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கடந்த அரசிலே நாங்கள் பலமாகவும், ஆட்சியாளர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் இருந்தோம். “நாம் மஹிந்தவை விட்டு போகமாட்டோம்” என்று சிலர் அடித்துக் கூறினர். எனினும், நாம் எடுத்த திடீர் முடிவு, மைத்திரி ஆட்சியமைப்பதை உறுதிப்படுத்தியது.. சந்தேகமான கணிப்பை வெளியிட்ட அரசியல் ஆய்வாளர்களும், தமது உறுதியான எழுத்துக்களைக் கூர்மைப்படுத்தினர்.

முஸ்லிம்களின் மத விவகாரங்களில் கை வைக்கப்பட்டதனாலும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவங்களினாலுமே, இவ்வாறானதொரு திருப்புமுனைக்கு நாம் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்னரே, படிப்படியாக மைத்திரியை ஆட்சிக்குக் கொண்டு வரும் நோக்கில், அரசியல்வாதிகளும், கட்சிகளும் அடுத்தடுத்து அணிதிரளத்தொடங்கினர். இந்த உண்மையை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

கடந்த அரசிலிருந்து நான் வெளியேறுவதற்கு முன்னர், ஒருநாள் அமைச்சர் பௌசியின்  வீட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை சந்தித்து, நாங்கள் எடுக்கப் போகும்  முடிவை மிகவும் கண்ணியமாகத் தெரிவித்தோம். ஆட்சியாளர்களும் குறிப்பாக, பசில் ராஜபக்சவும் வடபுல சமூகத்திற்கு செய்த உதவிகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்தோம். எனினும்,  நாம் வேறு வழியின்றி தவிர்க்க முடியாத வகையில், இந்த முடிவை மேற்கொண்டு வெளியேறுவதாக எடுத்துரைத்தோம். அவர் அதிர்ச்சியடைந்தார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ எவ்வளவோ கெஞ்சியும், சமூகத்துக்காகவே இந்த முடிவை எடுத்தோம்.

வடக்கு முஸ்லிம்களுக்கும், ஏனைய சில இடங்களில் வாழும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட சில பிரச்சினைகளுக்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மிகவும் நேர்மையாக, இதயசுத்தியோடு உதவி செய்திருக்கின்றார். இந்த விடயங்களுக்கு அப்பால், அவர் செய்த நன்றிகளையெல்லாம்  நினைத்தவர்களாகவே, நாம் அப்போது அந்த துணிச்சலான முடிவை மேற்கொண்டோம். அதன் பின்னர் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு மத்தியிலேதான், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டோம். முன்வைத்த காலை பின்வைக்காமல், இறைவனின் உதவியினால் மைத்திரி ஆட்சியை கொண்டுவருவதில் வெற்றிகண்டோம். புதிய ஆட்சி அமைந்த பின்னரும்,  முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நன்மைகளுடன், வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தையும் நாம் வலியுறுத்தி நின்றோம்.

புதிய ஆட்சியில், இடம்பெயர்ந்த அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்காக, மீள்குடியேற்ற அமைச்சை நாம் கோரி நின்றபோது, சில காரணங்களைக் காட்டி, அதனை தட்டிக்கழித்தனர். அதன் பின்னர், நாங்கள் மேற்கொண்ட இடையறாத முயற்சியின் காரணமாகவே, மீள்குடியேற்ற செயலணி உதயமானது. இந்த செயலணி வெறுமனே வானத்தால் வந்து குதிக்கவில்லை, மந்திரத்தாலும் வரவில்லை. அரசுக்கு தொடர்ச்சியாகக் கொடுத்த அழுத்தம், நாம் மேற்கொண்ட முயற்சி, அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்கான நியாயமான காரணங்கள் மற்றும் அமைச்சு விடயங்களில் சில விட்டுக்கொடுப்புக்கள் ஆகியவற்றினாலேயே, மீள்குடியேற்ற செயலணி  உருவாக்கப்பட்டது.

ஆனால், அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைப் பற்றியோ, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ இத்தனை வருடங்கள் எள்ளளவும் சிந்திக்காத சில அரசியல்வாதிகள், இப்போது எமது முயற்சியால் பிரசவிக்கப்பட்ட இந்த செயலணியின் செயற்பாடுகளை முடக்க வேண்டுமென்று பாடாய்ப்படுகின்றனர். நாம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி முயற்சிகளைக் கண்டு கதிகலங்கி நிற்பதனாலேயே, எம்மிடமிருந்து எப்படியாவது இந்த செயலணியை பிடுங்கிவிட வேண்டுமென்று ஆலாய்ப்பறக்கின்றனர். தலைகீழாக நிற்கின்றனர். மீள்குடியேற்ற செயலணியை எம்மிடமிருந்து அபகரிப்பதில், எதிரணி அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே வெவ்வேறு நோக்கங்கள் இருந்த போதும், அதனை பிடுங்கிவிட வேண்டுமென்பதில் அவர்களிடம் ஒரே கருத்தொற்றுமையே இருக்கின்றது.

நங்கள் நேர்மையான முறையில் மக்கள் பணியை மேற்கொள்வதனால், இறைவனின் துணையும், உதவியும் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. எனவே, இந்தச் செயலணியை பறித்தெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் கனவையும் கைவிடுமாறும், மக்களின் நல்வாழ்வுக்காக எம்முடன் இணைந்து பணியாற்றுமாறும்  அன்பாய் வேண்டுகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

-சுஐப் எம்.காசிம்- 

Related Post