மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எம்.எம்.தௌபீக் மதனி அவர்கள் வடபுல மீள்குடியேற்றம் தொடர்பாக விடுக்கும் ஊடக அறிக்கை.
வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் சில கடும்போக்கு இனவாத அமைப்புக்களும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களும் அண்மைக்காலமாக போலிப்பிரச்சாரங்களை மெற்கொண்டு வருவதாக மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஏம்.எம்.தௌபீக் மதனி தெரிவித்தார்.
வில்பத்து மீள்குடியேற்றம் எனும்போர்வையில் அண்மைக்காலமாக ஊடகங்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறாக எமது சமூகத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போலிப்பிரச்சாரங்கள் மூலம் வடபுல அகதி மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம்மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது இவ்வாறான விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த காலத்தில் செயற்பட்ட அரசாங்கம் எமது மக்களுடைய மீள்குடியேற்ற விடயம் தொடர்பில் போதுமான கவனம் செலுத்தாமலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்களையும குற்றம்சாட்டுகின்ற நிலையே காணப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் எமது மக்கள் மீளக்குடியேறி சொந்த மண்ணில் இயல்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு விரும்பாத தீய சக்திகள் அதனை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றன. இவ்வாறானவர்களின் செயற்பாட்டினை தாம் வன்மையாக கண்டிப்பதோடு தங்களது எதிர்ப்பினையும் தெரிவிக்கின்றோம்.
வடபுல முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தி வரும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் சட்டத்திற்கமைவாக அராங்க அதிபர், பிரதேச செயலாளர், காணி ஆணையாளர் மற்றும் அதுதொடர்பான உயர் அதிகாரிகளின் அனுமதியினை பெற்று அகதி மக்களுக்காக அரும்பணியாற்றி வருகின்றார்.
அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான விசமப்பிரச்சாரங்களையும் எமது வடபுல முஸ்லீம் சமூகத்தினது மீள் குடியேற்றத்தினை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இனவாதிகளையும் அதோடு தொடர்புடைய ஊடகத்தினையும் கண்டிக்கும் வகையில் கிழக்கு மாகாண மக்களும் பொது அமைப்புக்களும் ஆதரவு வழங்கி குரல் கொடுக்குமாறு வடபுல அகதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் .
எம்.எம்.தௌபீக் மதனி
ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் – மன்னார் முசலி