(சர்ஜூன் ஜமால்தீன்)
வடக்கு முஸ்லிம்கள் உதைபடும் கால்பந்து போல் எல்லாத் திசைகளிலும் நசுக்கப்படுகிறார்கள்.இலக்குகளை நோக்கி நகர முடியாதவாறு அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் எதிரிகளால் நகர்த்தப்படுகின்றன. இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து வடமுஸ்லிம்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும் என அமைச்சர் றிஷhட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் கொய்யாவாடியில் நேற்று2013-08-30 நல்லிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்; உரையாற்றுகையில்
அல்லாஹ்வின் உதவியால் வடக்கு முஸ்லிம்களின் நிலைமை இப்போதுதான் மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இம்மக்கள் 20வருடங்களாக கண்ணீரையே சுமந்து கொண்டிருக்கின்றார்கள். பல தேவைப்பாடுகள் இம்மக்களுக்கு இருந்தும் அவற்றை நிறைவேற்றுவதற்கும் அவர்களின் குறைகளைக் கேட்பதற்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு வடமாகாண சபைத் தேர்தல் வரும் வரை நேரம் கிடைக்கவில்லை.
எனினும் தற்போது அதிகமான முஸ்லிம் அரசயல் வியாபாரிகளை வடக்கில் காணக்கூடியதாக உள்ளது. இவர்களின் வருகையானது வட முஸ்லிம்களை விமோசனத்தை நோக்கி இட்டுச் செல்லுமாக இருக்கும் என்றால் நான் மிக்க சந்தோசம் அடைவேன்.
ஆனால் இவ் அரசியல் வாதிகள் அரசியல் நாகரீகம் அற்ற முறையில் செயற்படுகின்றார்கள். இம் மக்களுக்காக மீள் குடியேற்ற திட்டங்களை, எதிர்கால தேவைகளை வரையிட்டு கொண்டு வந்து வடக்கு முஸ்லிம்களிடம் கூறி தேர்தல் பிரச்சாரம் செய்வார்களாக இருந்தால் இம்மக்கள் பயனடைவார்கள்.
ஆனால் முஸ்லிம் காங்கிரசி;னர் பள்ளி உடைபடுகின்றது என்ற கோசத்தையே தேர்தல் மேடைகளில் முழங்குகின்றார்கள்.
வடக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தால் பள்ளி உடைப்பை தடுக்க முடியுமென்றால் கிழக்கு முஸ்லிம்கள் இட்ட வாக்கினைக் கொண்டு எந்த பள்ளி உடைப்பை இவர்கள் தடுத்துள்ளார்கள்?
கிழக்கு முஸ்லிம்களிடம் பொய் வாக்குறிதிகளை கூறி வாக்குகளைக் கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரசினர் அந்த அனுபவத்தை இன்று தனித்து விடப்பட்ட, அரசயில் அநாதையாக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களிடமும் உட்செலுத்த முட்படுகின்றார்கள். இவர்களின் சமூக விரோத செயலை அல்லாஹ்வும் பொறுக்கமாட்டான்.
வடக்கு முஸ்லிம்களுக்காக இரவு பகல் பாராது பாடுபட்டுக் கொண்டடிருக்கின்ற என்னை புத்தளத்திலும் மன்னாரிலும் தூற்றுவதே தமிழ் அரசயில் வாதிகளுக்கும் முஸ்லிம் காங்கிரசினர்க்கும் பிரச்சாரமாக உள்ளது.
நான் இவ் அரசியல் வியாபாரிகளிடம் ஒன்றை சொல்லிக் கொள்கின்றேன். தயவுசெய்து ஐம்பது நூறு என்று முஸ்லிம் வாக்குகளை பிரித்து வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளை எண்ணிக்கையிலிருந்து பூச்சியத்திற்கு மாற்றிவிடாதீர்கள். இது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும். இம்மக்களின் மீள்குடியேற்றம் உட்பட அனைத்து பிரச்சனைகளும் நிறைவேறி தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும். இதனை அடைந்து கொள்ள என்னுடைய முஸ்லிம் சமுகத்திற்காக நான் எல்லா விதமான தியாகங்களையும் செய்ய தயாராக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.