Breaking
Sun. Dec 22nd, 2024

மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி), வதந்திகள் ஊடாகப் பிளவுப்படுத்த முடியாது என்று, முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் உள்வீட்டு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கே.டி.லால் காந்த அல்லது கட்சியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்குத் தலைமையை வழங்குமாறு, கட்சியின் மத்திய குழுவின் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் இதனால் அக்குழுவினருக்கும், தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்கும் குழுவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறுப்பை, கட்சியின் சிரேஷ்ட தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அநுரகுமார திஸாநாயக்க வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பிரச்சார செயலாளரும் எம்.பியுமான விஜித ஹேரத், பிரதான செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அரசியல் சபை உறுப்பினர் கே.டி லால்காந்த ஆகியோர் இணைந்து, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, ஜே.வி.பி பெரும் பங்காற்றியது. அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு குழுவினரே, எங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். வதந்திகளின் ஊடாக ஜே.வி.பியை பிளவுபடுத்த முடியாது’ என்றார்.

By

Related Post