பாப்பரசர் பிரான்சிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு இலங்கை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இலங்கையின் ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்களுக்குத் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பரசர், உலகில் இன்று இடம்பெறும் காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பதற்கு சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.
ஆயுத உற்பத்தியை தவிர்த்தல், உலகில் யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தவிர்த்தல் என்பவற்றுக்காக எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்திய பாப்பரசர், சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி தொடர்பில் ஒரு நெருக்கமான அன்பை தனது உள்ளத்தில் உணர்வதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசிய ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பாப்பரசரின் ஆசீர்வாதம் ஒரு பெரும் பலம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி ஏனைய சகல சமய மக்கள் மத்தியிலும் பாப்பரசர் குறித்த ஒரு பெரும் மதிப்பு இருப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் அர்ப்பணித்த ஒரு தலைவராக தான் பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பாப்பரசர், சமாதானம் மற்றும் ஐக்கியத்தை அர்த்தப்படுத்தும் ஒரு விசேட நினைவுச் சின்னத்தையும், சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி தொடர்பில் பாப்பரசரினால் வெளியிடப்பட்ட ஒரு நூலும் இச்சந்திப்பின்போது பாப்பரசரால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. பாப்பரசரைச் சந்தித்ததன் பின்னர் வத்திக்கான் அரசின் பிரதமர் பியட்டோ பரோலின் கார்ட்டையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.