Breaking
Tue. Jan 7th, 2025

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள வன்னி பிரதேசத்தில் எந்தவொரு ஓலை வீடும் இருக்கக் கூடாது என்ற உயரிய இலக்கை நோக்கியே அமைச்சர் றிஷாட் பதியுதீன் பயணிக்கின்றார் என வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரிப் தெரிவித்தார்.

கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா, மன்னார், தலைமன்னார் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை கண்டறியும் பொருட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பை ஏற்று அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டு வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 1 இலட்சத்து 25 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் படித்தவர்கள், பண்டிதர்கள் என இருந்தாலும் எங்களுக்கு கிடைத்தது மூன்றெழுத்து முகவரி அகதி என்ற அந்தஸ்து அந்த அகதிகளில் ஒருவராக இருந்து அமைச்சரான காரணத்தினால் தான் வடபுல மக்களுக்காக இன, மத வேறுபாடின்றி சேவையாற்றி வருகின்றார். அன்றைய அவரது முடிவு தான் இன்று வடபுல மக்களை அகதி அந்தஸ்திலிருந்து மாற்றமடையச் செய்துள்ளது.

பல வித்தகர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் எம்மிடையே காணப்பட்டாலும் நாங்கள் அகதி என்ற அந்தஸ்தில் குடியேறிய இடங்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை ஆகையால் எமது கடின உழைப்பு, விடாமுயற்சி, துணிவு, அமைச்சரின் பலம், அரசியல் சாணக்கியம் அத்தனையும் பிரயோகிக்கப்பட்டு இன்று முகவரியாளர்களாக நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றோம். இந்த நாட்டிலே மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியாக இருந்தாலும் சரி, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியாக இருந்தாலும் சரி எந்தவொரு ஆட்சியையும் தீர்மானிக்கின்ற சக்தியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் காணப்படுகின்றார்.

மன்னார் முசலி பிரதேசத்தில் மாத்திரம் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்காக 4283 வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும் 500 வீடுகளை அமைப்பதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. எந்தவொரு அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சர் றிஷாட் பதியுதீன் செய்த சேவைகள் போல் வன்னி மக்களுக்கு செய்ததில்லை. 20 வருடங்களுக்கு மேலாக எமது சமுகத்தின் பெயரை தாங்கிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளும் மீள்குடியேறியுள்ள மக்களுக்காக ஒரு வீட்டைக்கூட கட்டிக்கொடுக்காது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து எந்தவொரு சேவையையும் செய்யவில்லை என்பதனை மனவேதனையுடன் கூறிக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

-முஹமத் முஜாஹித்-

Related Post