– ஏ.ஆர்.ஏ.பரீல் –
மஹியங்கனையில் இடம்பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்பவத்தையடுத்து பொதுபலசேனா அமைப்பு அளுத்கமை சம்பவம் போன்ற ஒன்றினை உருவாக்க முயற்சிப்பதாகவும் அப்பகுதி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஜாதிக பலசேனாவின் செயலாளருமான வட்டரக்க விஜித தேரர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடமும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர்கள் இருவரையும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு மஹியங்கனையில் இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விளக்கியுள்ளதாகவும் அமைச்சர்கள் இருவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், ‘மஹியங்கனையில் நீண்டகாலமாக முஸ்லிம்கள் பெரும்பான்மை இனத்தவருடன் ஒற்றுமையாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால் அங்கு இடம்பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்பவத்தையடுத்து பொதுபலசேனாவும் இனவாதிகளும் இனவிரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மஹியங்கனையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஆற்றிய உரையையடுத்து அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
அவர் அளுத்கமையில் ஆற்றிய உரையையடுத்து ஏற்பட்ட வன்செயல்களை மக்கள் மறந்துவிடவில்லை. அதனால் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் கலந்துரையாடி இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கும் படி வேண்டியிருக்கிறேன்.
பௌத்த கொடி எரிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகள் என்றால் தண்டனை வழங்க வேண்டியது சட்டத்தின் கடமையாகும்.
இது போன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர் இருவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.