ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில், அப்துல்லா, அப்துல் ரகுமான் என்று பெயரிடப்பட்ட அந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்காக அவர்களின் பெற்றோர் சவுதி அரேபியாவிற்கு அழைத்து வந்தனர். பின்னர், அந்நாட்டு சுகாதார மந்திரி அப்துல்லா-அல்-ரபியாவின் வழிகாட்டுதலில், தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அசீஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட மருத்துவர் குழுவால் 9 மணி நேரமாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் குழந்தைகளின் ஒட்டியிருந்த வயிறுகள், சிறுநீரக அமைப்புகள் மற்றும் இடுப்பு எலும்புகள் மிக கவனமாக பிரிக்கப்பட்டன. வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் தற்போது குழந்தைகள் மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.