இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும் எக்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று (14) பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் கல்வி, தொழில் இல்லா பிரச்சினையுடன் காதல் பிரச்சினையும் காணப்படுகின்றது.
பணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. பாரியளவில் பணத்தைச் செலவழித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
21ம் நூற்றாண்டு பற்றி பேசினாலும் இன்னமும் நாட்டில் வரதட்சணை முறைமை காணப்படுகின்றது.
வரதட்சணை காரணமாக இளைஞர் யுவதிகள் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே வரதட்சணை முறைமையை ரத்து செய்யுமாறு நான் இன்றைய காதலர் தினத்தில் கோருகின்றேன்.
வரதட்சணை பெற்றுக் கொள்வது வெட்கம் கெட்ட செயலாகும் என பிமல் ரட்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.