இலங்கை முஸ்லிம்களை அவதானிக்கும்பொழுது சமூகத்துக்காக செய்தது என்ன என நினைக்க தோணுகின்றது. ஒரு சமூகம் முழுமைபெற்று திகழ வேண்டுமாயின் அரசியல் துறை, ஆண்மீக துறை, கல்வி, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் இன்னும் அனைத்து துறைகளிலும் முன்னேறி செல்ல வேண்டும்.
ஒரு சமூகத்தின் அடையாளமான வரலாறு என்பது முஸ்லிம்களுக்கு ஆவணங்கள் வடிவில் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு ஆவணமாக இருக்கும் பட்சத்தில் அதனை மறுப்பதற்காகவேனும் பிற சமூகத்தவர்களை தேடிக்கற்றுக்கொள்ள வழிசமைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.
முஸ்லிம்களுக்கு இலங்கையில் பூர்வீகம் உள்ளது என்பதை நிரூபித்துக்காட்டுவதற்கு இவ்வாறன ஆவணங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனென்றல் முஸ்லிம்கள் கண்ணுக்கு புலப்படும் கடவுளை வாங்குவதில்லை. சிங்கள பெரும்பாண்மை சமூகத்தின் வரலாறுகளுக்கு சான்றாக பழங்கால பௌத்த மத விகாரைகளும் புனித பூமிகளும் காணப்படுவதுபோல் தமிழ் சமுகத்தினருக்கும் சான்றுகள் இருக்கின்றன.
இவ்விரு சமூகங்களும் தமது பழங்கால வரலாற்று தடயங்களை ஒருபோதும் அழிக்க முற்படுவதில்லை. உதாரணத்திற்கு பழங்கால விகாரையையோ கோவிலையோ உடைத்துவிட்டு புதியதொன்றை அமைப்பது மிகக்குறைவு. அனால் எம்மவர்கள் நாட்டில் நாம் வாழ்ந்ததுக்கான தடையங்களை படிப்படியாக அழித்துக்கொண்டு வருகின்றர்கள்.
பழங்கால பள்ளிவாசல்கள் இலங்கையில் பாதுகாக்கப்படுவதில்லை. பழங்கால பள்ளிவாசல் முற்றாக அழிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்படுகின்றது. அத்தோடு பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் முஸ்லிம்கள் நசுக்கப்படும்போது ஆவனரீதியாக எம்மால் போராட முடியாமல் போய்விடுகிறது.
ஒருசில முஸ்லிம் கிராமங்களில் மிக பழமைவாய்ந்த பள்ளிவாசல்கள் இன்னமும் இருக்கின்றன அதுகூட போதியளவு பொருளாதாரம் இல்லாமையினாலேயே இன்னமும் இருக்கின்றது. முடிந்தவர்கள் அவ்வாறான பள்ளிவாசல்களுக்குள் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தல் சென்று பாருங்கள், அப்போது உங்கள் உள்ளங்களில் ஏற்படும் மாற்றத்தினை உணர முடியும்.
அத்துடன் தமது சமுகம் பற்றிய சிந்தனையும் எம்மவர்களுக்கு குறைந்துகொண்டு செல்கின்றது. எதிர்காலத்தில் ஒற்றுமை என்றல் என்ன என்று முஸ்லிம் சமூகமே கேள்வி எழுப்பும் என்பது எனது கருத்து. ஏனென்ரால் சகல துறையிலும் பிரிந்திருந்து சகலதுறை பிரிவினைவாதிகளாக நாமே சாதனை படைத்துள்ளோம்.
இந்நிலை மாற வேண்டும். நேற்றைய இளைஞர்கள் விட்ட தவறினையும், மூத்தவர்கள் விட்ட தவறினையும் இன்றைய மூத்தவர்களும் இன்றைய இளைஞர்களும் விடக்கூடாது என்பது எனது பணிவான வேண்டுகோள். எமது சமுதாயத்தின் சகலதுறை முன்னேற்றத்துக்கும் பாதுகாப்பிற்கும் நாம் ஒன்றுபட்டேயாக வேண்டும். இன்ஷா அல்லாஹ்.