Breaking
Sun. Dec 22nd, 2024

சவுதி அரேபியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வளைகுடா நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு தொடர்ந்து உதவுமாறு கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. அதேநேரம் அணு ஆயுத உற்பத்தி செய்வதாகக் கூறி ஈரானுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடித்து வந்தது. வளைகுடா நாடுகளும் ஈரானும் எதிரிகள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. இதையடுத்து, வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.

ஈரானுடன் அமெரிக்கா நெருங்கிப் பழகுவதாக வளைகுடா நாடுகள் குற்றம் சாட்டின. இந்நிலையில்தான் இந்த ஆண்டுடன் பதவிக்காலம் முடிய உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இறுதி பயணமாக புதன்கிழமை சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு சவுதி மன்னர் சல்மான் உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது,

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு தொடர்ந்து உதவுமாறு ஒபாமா கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. ஐஎஸ் அமைப்புக்கு எதிரான இந்தப் போரில் வளைகுடா நாடுகளும் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் இவர்கள் விவாதித்தனர்.

இதையடுத்து, ரியாதில் வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதிலும் ஒபாமா கலந்து கொண்டார். இந்த மாநாட்டிலும் ஈரானுடனான அமெரிக்க உறவு, ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

By

Related Post