Breaking
Mon. Dec 23rd, 2024

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மழை காரணமாக 306 குடும்பங்களைச் சேர்ந்த 1134 பேரும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 391 குடும்பங்களைச் சேர்ந்த 1508 பேரும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

55 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வவுனியா வடக்கு பகுதியில் 21 வீடுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன.

ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா மருக்காரம்பளை பகுதியில் ஒரு நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு ஒரு குடும்பம் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 62 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக குளத்து நீர்மட்டம் அதிகரித்து பல குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன், செட்டிகுளம் – பூவரசன்குளம் வீதியை ஊடறுத்து 7 அடி உயரத்திலும், சின்னசிப்பிகுளம் – செட்டிகுளம் வீதியை ஊடறுத்து 4 அடி உயரத்திலும் நீர் பாய்ந்து வருகின்றது.

இதனால் செட்டிகுளம் – பூவரசன்குளம் வீதியில் படகு மூலம் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

By

Related Post