Breaking
Sat. Jan 4th, 2025

-ஊடகப்பிரிவு-

வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று (20/11/2017) அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு, வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிவாசலுக்குச் சொந்தமான அந்தக் கடைகளை அகற்ற வேண்டுமென சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தியதன் பின்னணியில் இந்த நாசகார செயல் இடம்பெற்றுள்ளது எனவும், இது தொடர்பில் பள்ளி நிர்வாகம் ஏற்கனவே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருப்பதையும் பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

மூவினங்களும் அமைதியாகவும், ஒருவரோடொருவர் இரண்டறக்கலந்தும் வாழும் வவுனியா நகரில், மீண்டும் ஒரு கலவரத்தை தோற்றுவிக்கும் வகையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பது போன்று தெரிகின்றது. அவ்வாறு திட்டமிட்ட வகையில் இந்த தீயசெயல் இடம்பெற்றிருந்தால், பக்கசார்பற்ற விசாரணைகளை நடாத்தி உரியவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, வடபிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவுடன் இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

கடையெரிப்பு நடந்த இடத்துக்கு மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விஷேட குழுவொன்று பணிக்கமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அமைச்சரிடம் தெரிவித்தார். அத்துடன், பிரதேச மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post