வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்று முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ஹரிசன் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன், வவுனியாவுக்கு பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் வவுனியா மற்றும் அதனை அண்டியுள்ள பல்வேறு பிரதேசங்களின் விவசாயிகள், வர்த்தகர்கள், நுகர்வோர் பயன்பெற வழி கிடைத்தது.
கடந்த மாதம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் முழுமையான ஆதரவுடன் இதனை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு, அதற்கான உரிய இடமும் அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபருக்கு உத்தியோகப்பூர்வ அறிவித்தலும் வழங்கப்பட்டு இருந்தபோதும், பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதில் சில தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
எனினும் இத்தடைகளைச் சரி செய்துகொள்ள முடியும் என்ற நோக்கில், நேற்று அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட இருந்தன. ஆனால் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தப் பொருளாதார மையத்தை குறித்த இடத்தில் அமைப்பதற்கான தனது முடிவை ஒருவார காலத்தில் அறிவிப்பதாகத் தெரிவித்து, கால அவகாசம் கோரினார். அதனால் அவரது முடிவு கிடைத்த பின்னர் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க முடியுமென திடமாக நம்புகின்றோம்.
நேற்றைய கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ள 3000 மில்லியன் ரூபாவை, எந்தெந்த விடயங்களில் பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக ஆராய்ந்தோம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், வீடில்லா மக்களுக்கு வீடமைத்துக் கொடுத்தல், பாதை சீரமைப்பு, நீர், மின்சாரப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது என அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.