-சுஐப் எம்.காசிம் –
50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் வாழ்கின்ற இந்தப் பிரதேச காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை (பெர்மிட்) தராமல் தொடர்ந்தும் இழுத்தடித்து வருகின்றார்கள். நீங்களாவது இந்த விடயத்தில் கரிசனைகொண்டு எமக்கு உதவ வேண்டுமென, வவுனியா தமிழ்க் கிராம மக்கள் அமைச்சர் றிசாத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
வவுனியா தமிழ்க் கிராமங்களுக்கு கடந்த சனிக்கிழமை (07/05/2016) விஜயம் செய்த அமைச்சரிடம் மக்கள் பல கோரிக்கைகளை விடுத்து, அவற்றை நிவர்த்தித் தருமாறு வேண்டினர். மணிபுரம், பழைய மணிபுரம், சமயபுரம், கணேசபுரம், மலுக்கார மலை ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் கணேசபுர பாடசாலையில் அமைச்சர் றிசாத்தை சந்தித்த போதே தமது கஷ்டங்களையும், துன்பங்களையும் விபரித்தனர்.
“நாங்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இந்தக் காணிகளுக்கு இன்னும் அனுமதிப் பத்திரங்கள் கிடைக்கவில்லை. காலத்துக்குக் காலம், தேர்தலுக்குத் தேர்தல், இங்கு வரும் அரசியல்வாதிகளிடம் நாம் எத்தனயோ முறை கெஞ்சியும், மன்றாடியும் கேட்டபோதும் எமக்கு எவரும் உதவுகின்றார்கள் இல்லை. இந்தக் காணிகள் எமக்கு சொந்தமாக்கப்படாததனால், நாம் வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றோம். உதவித் திட்டங்களைப் பெறமுடியாத நிலை. வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொள்ள சொந்தமாக வீடு பெற முடியாத நிலையில். கைசேதத்துடன் வாழ்ந்து வருகிறோம். வீட்டுத் திட்டத்திலும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். வவுனியாவுக்கு வடக்கே உள்ள தாண்டிக்குளம் பகுதியில், அண்மைய காலங்களில் குடியேறியோருக்கு அனுமதிப்பத்திரம் கிடைத்துள்ளபோதும், எமக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம் என்று விளங்கவில்லை. இங்குள்ள பனை, தென்னை மரங்களின் வாழ்க்கைக் காலத்தை கணிப்பிட்டுப் பார்த்தால், எமது வரலாற்றுப் பூர்வீகம் நன்கு விளங்கும். நாங்கள் பயிர் செய்யும் வயல்களின் அடியிலே அதிசக்தி வாய்ந்த மின் இணைப்புக் கம்பிகளை பொருத்த மேற்கொண்டுவரும் முயற்சிகளை நாம் தடுக்க முடியாத நிலையில் இருப்பதற்குக் காரணம், காணிகள் எமக்குச் சொந்தமில்லாததே” என்றும் அமைச்சரிடம் கூறினார்.
நாங்கள் நன்றி மறந்தவர்கள் அல்லர். கடந்த காலங்களில் எமது கிராமங்களில் 25 நாட்களுக்குள் இலவச மின்சார இணைப்புக்களை நீங்கள் பெற்றுத்தந்தீர்கள். எமது வீடுகளைத் திருத்துவதற்கு நிதியுதவி பெற்றுத்தந்தீர்கள். யுவதிகளுக்குத் தையல் பயிற்சிகளை வழங்கி, தையல் இயந்திரங்களை கையளித்தீர்கள். பாடசாலைக்கும் உதவிகளை வழங்கினீர்கள். இனிவரும் காலங்களிலும் எமக்கு நீங்கள் உதவ வேண்டும். இந்தப் பிரதேசத்தில் சுமார் 800 குடும்பங்கள் ஓலைக் கொட்டில்களில் வாழ்கின்றன. வீட்டுத் திட்டத்திலும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவற்றையும் புனரமைத்துத் தருமாறும் அமைச்சரிடம் வேண்டினர்.
பாடசாலை அதிபர் இங்கு உரையாற்றியபோது, பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை விபரித்தார். இந்தப் பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் வசதி இல்லாததால் சிறுநீரக நோய்க்கு பலர் ஆளாகியுள்ளதாகவும், ஆய்வறிக்கையில் இந்தப் பிரதேச மக்களே, சிறுநீரக நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் றிசாத் கூறியதாவது,
காணி அனுமதிப்பத்திரம் தொடர்பில் சில படிமுறைகளை தாண்ட வேண்டிஇருப்பதால் அதற்கான உரிய நடவடிக்கைகளை தாம் ஏற்கனவே எடுத்துள்ளோம். அத்துடன் மாகாண, பிரதேச சபைகளின் நிர்வாகத்தின் கீழேயே பாதை விடயங்கள் வருகின்ற போதும், அவர்களுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசின் பங்களிப்பை பெற்றுத்தர நாம் நடவடிக்கை எடுப்போம். பாடசாலை குறைபாடுகளையும் முடிந்தவரையில் நிவர்த்தித்துத் தருவோம். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இதனைக் கொண்டுவந்து முறையான திட்டமொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.