வாகன உரிமையை உறுதி செய்து கொள்ள சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாது வாகனங்களை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வாகன உரிமை கோராது வாகனங்களை பயன்படுத்தி வருவோர் வாகன உரிமையை கோர முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகன உரிமை கோரப்படாத வாகனங்களின் உரிமை மாற்றம் செய்யப்படும் போது வழமையாக உரிமை கோரப்படாத காலத்திற்கு நாள் ஒன்றுக்கு தலா 100 ரூபா அபராதமாக அறவீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த அபராதத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சில வாகனங்கள் மூன்று, நான்கு பேருக்கு கைமாறப்பட்டுள்ள போதிலும் வாகன உரிமை உறுதி செய்யப்படவில்லை.
சில வாகனங்கள் 8 முதல் 10 ஆண்டு வரையில் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கான உரிய உரிமை ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
இன்று முதல் நவம்பர் மாதம் 30ம் திகதி வரையில் வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தில் வாகன உரிமையை உறுதி செய்யும் ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.