பூரணப்படுத்தப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிராமசேவகரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித் தார்.
இளைஞர்களின் தேர்தல் அறிவு மற்றும் பங்கேற்பை வலுவூட்டும்வகை யில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த வருடத்துக்கான வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பட்டியலிடப்படவுள்ளது. ஆகையினால் வாக்காளர் பெயர் பட்டியல் கிடைத்தவர்கள் அதனை பூரணப்படுத்தி ஆகஸ்ட் 7ஆம் திகதிக்கு முன்னர் கிராமசேவகரிடம் கையளிக்க வேண்டும். அவ்வாறு தங்கள் வாக்காளர் பெயர் பட்டியலை சேகரிப்பதற்கு கிராமசேவகர் வராவிட்டால் அந்த பிரதேசங்களுக்கு கிராமசேவகர் ஊடாகவோ நேரடியாகவோ அந்தந்த மாவட்டங்களின் வாக்காளர் பெயர் பட்டியலை சேகரிப்பதற்கு எமது அதிகாரிகள் வருவார்கள்.
அத்துடன் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான சீதாவக்க, கடுவல, கொலன்னாவ, வத்தளை, பியகம களனி, அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய மற்றும் எட்டியாந் தோட்டை ஆகிய 9 பிரதேசங்களில் வாக்காளர் பெயர் பட்டியல் சேகரிப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம்.
மேலும் வாக்காளர் பெயர் பட்டியல் கிடைக்காதவர்களுக்கு வாக்காளர் கணக்கிடும் பத்திரம் ஒன்றை எமது அலுவலக இணையத்தில் இருந்தோ அல்லது கிராமசேவகர் அலுவலகம் மற்றும் பத்திரிகையினூடாக பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என் றார்.