-ஊடகப்பிரிவு-
வாக்காளர் இடாப்பில் 52 சதவீதமாக இருக்கும் பெண்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் மிகவும் குறைவாக கஞ்சிக்குள் இட்ட பயிராக இருப்பது வேதனையானது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மகளிருக்கான விஷேட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். ஒலுவில், கொலனி 5ஆம் பிரிவு, திராய்க்கேணி, பாலமுனை, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகியவற்றில் இடம்பெற்ற கூட்டங்களில் அவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அவர் கூறியதாவது, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நமது நாட்டின் உள்ளூராட்சி வரலாற்றில் புதியதோர் ஏட்டைப் புரட்டுவதற்கான முன்முயற்சியாகக் கருதப்படுகின்றது. இந்தத் தேர்தல் வித்தியாசமான முறையில் அமைவதோடு மாத்திரமின்றி, வெற்றியின் பங்காளிகளில் கணிசமானோர் மாதர்களாக இருப்பர் என்ற எதிர்பார்ப்பும் எதிர்வுகூறலும் அபரிமிதமாக உள்ளது.
நமது சமூகத்துக்கு தமது சேவைகளை செய்யத் துடிக்கின்ற ஆளுமை மிக்க பெண்கள் பலர் வீட்டிலே முடங்கிக் கிடக்கின்றனர். பெண்களை, தொழில் செய்யவும், கல்விக் கூடங்களுக்கும் எந்தவிதமான தயக்கமுமின்றி வெளியே அனுப்பும் நமது சமூகம், அவர்கள் மக்கள் பணிபுரிய முன்வரும்போது, பல தடைகளை விதிப்பது ஏனென்று புரியவில்லை.
இந்த மடத்தனமான மனப்பாங்கு சீர் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெண்களின் நலன்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறந்த வழிகாட்டலில் எமது கட்சி வெற்றிகரமாக நடைபோடுகின்றது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் பிரதேசங்களுக்கான மகளிர் அணித் தலைவிகள், அப்பிரதேசங்களின் அமைப்பாளர்கள் முன்னிலையில் தெரிவுசெய்யப்பட்டு நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் ஒலுவில் பிரதேச மகளிர் அணித் தலைவியாக ஜென்னதுல் நஸ்மிலா, கொலனி பிரதேசத்திற்காக பாத்திமா ரஜா, நிந்தவூர் பிரதேசத்திற்காக சித்தீக் பஸ்பிகா திராய்க்கேணி, பாலமுனை பிரதேசத்திற்காக செல்வி மயூரி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்காக சட்டத்தரணி ரிப்காவும் தெரிவுசெய்யப்பட்டனர்.