முப்பது வருட காலங்களாக அரசியலில் கோலோச்சியவர்கள், தேர்தல் வந்தவுடன் அரிசிப்பொட்டலங்களுடனும், பணமூட்டைகளோடும் வீடுவீடாக வருவதென்பது, அவர்களது அரசியல் வங்குரோத்தை எடுத்துக் காட்டுவதாக மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
ஏறாவூர், மீராகேணி மற்றும் ஓட்டுப்பள்ளி பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இப்பொழுது தேர்தல் வந்தவுடன், ஏறாவூர் பற்றுக்கு பாடசாலை தருகிறோம், வீதி தருகிறோம், பூங்கா தருகிறோம் என பிரச்சாரம் செய்தவர்களே, கடந்த 30 வருடகாலங்களாக ஏறாவூர் பற்றை அரசியல் இலாபங்களுக்காக துண்டாடி, உங்களுடைய பலவீனத்தை அறிந்து, அரசியல் குளிர்காய்ந்த அரசியல்வாதிகள் எனவும், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வாக்குப் போடும் மெசின்களாக உங்களை பார்த்தவர்கள், இப்போது பெரிய பெரிய விஞ்ஞாபனங்களோடு உங்களை ஏமாற்ற மாநாடுகளை நடாத்த தயாராகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
என்ன விலை கொடுத்தேனும் அரசியல் கதிரையை தக்க வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், தான் ஒரு போதும் இல்லை என்பதை தெளிவுபடுத்திய மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி முதன்மை வேட்பாளர் அமீர் அலி, கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்காக நீங்கள் படைபடையாக வாக்குகளை வழங்கியவர்களில் யார் உங்களுக்காக பாராளுமன்றத்திலும், கலவரங்களின் போதும், முஸ்லிம் மக்கள் ஒடுக்கப்பட்ட போதும் தோளோடு தோள் நின்று குரல் கொடுத்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாகவும் கூறினார்.
எங்கோ இருந்து வந்த, யாரோ ஒரு தீவிரவாதி சஹ்ரான் செய்த ஈனச்செயலுக்காக “எமது சமூகத்தை பழிவாங்காமல், என்னை தூக்கு மேடைக்கு ஏற்றுங்கள்” என உயிரையும் துச்சமெனக் கொண்டு, இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணிக்க துணிந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இன்று அரசியல் பழிவாங்குதலுக்காக, அவரையும் அவரது சகோதரர்கள், மனைவி என குடும்பத்தில் ஒருவரையும் விடாது, அரங்கேற்றிக்கொண்டிருக்கின்ற அவலத்துக்கு பதில் சொல்லுகின்ற தேர்தலாக, இந்தத் தேர்தலை முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும்.
“உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் நூறு சதவீதம் தீர்ப்பேன்” என்ற பொய்யான வாக்குறுதியை வழங்குவதற்கு நாம் தயார் இல்லை என குறிப்பிட்ட அவர், இயன்றளவு பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், அதிகளவான உரிமைப் போராட்டங்களையும் சந்திக்கும் காலமாகவே வருங்காலம் அமையலாம் எனவும் இதன்போது கூறினார்.