எமது நாட்டின் அரசியலமைப்பு வலுவாக்கம், நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல் அடிப்படை கட்டமைப்புக்களை தீர்மானிப்பவர்களை உருவாக்க தேர்தல் அவசியம். அதேபோல் நாட்டை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் ஒன்று அவசியம். எமது மக்களுக்கு அரசாங்கம் ஒன்று தேவையாயின் சகலரும் தமது வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். வாக்கு உங்கள் உரிமை அதனால் அனைவரும் கண்டிப்பாக வாக்குசீட்டில் பெயரை பதிவு செய்யுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை(20) இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த நாட்களில் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாக்கு சீட்டுக்கள் பயன்படுத்தும் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுள்ளன. எனவே சகலரும் தமது பெயர் விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிராம சேவகரிடத்தில் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க முடியாவிட்டாலும் வாக்கு சீட்டுக்கள் கிடைக்காவிட்டாலும் அது தொடர்பில் கிராம சேவகருக்கு அறிவிப்பது அவசியமாகும்.
சர்வஜன வாக்கெடுப்பை வலுப்படுத்தும் தேசமாக இலங்கையை மாற்றியமைக்க எதிர்பார்க்கின்றோம். முக்கியமானது சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவதாகும். அதனால் இந்த முறை வீதியில் இருப்பவர் உட்பட சகலரையும் வாக்குச்சீட்டில் உள்வாங்கியுள்ளோம்.
அத்துடன் கொழும்பை பொறுத்த வரையில் 60 ஆயிரம் பேர் வரையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் இவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொள்ள முடியும். இவர்களின் சொந்த வசிப்பிடம் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.