காணாமற்போனோர் தொடர்பான அலுவலகச் சட்டமூலத்தில், ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்வைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திருத்தங்களுக்கமைய, மேற்படி சட்டமூலத்தின் 7ஆவது பக்கத்திலுள்ள 11ஆவது பந்தியின் 21ஆவது வரி முதல் 29ஆவது வரி வரையான பந்தி நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவின்றி, இராணுவ முகாமொன்றுக்கோ அல்லது வேறோர் நிலையத்துக்குள்ளோ நுழைவதற்காக அலுவலகத்துக்கிருந்த அனுமதி, தேசிய அல்லது சர்வதேச ரீதியில் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்வதற்கான அவ்வலுவலகத்துக்கிருந்த அனுமதி ஆகியன, சட்டமூலத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
இன்னும் திருத்தங்கள் இருப்பின், அவை தொடர்பில் தெளிவுபடுத்தி, அவற்றை நீக்கிக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த வாய்ப்பை, கத்திக் கூச்சிலிட்டு இல்லாமல் செய்துகொண்டனர் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சமரசிங்க, ஒன்றிணைந்த எதிரணியினர், சபை நடவடிக்கையின் போது நடந்துகொண்ட விதம் தொடர்பில், தனது அதிருப்தியையும் வெளியிட்டார்.
இதேவேளை, இந்த காணாமற்போனோர் தொடர்பான அலுவலகச் சட்டமூலமானது, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமையவே நிறைவேற்றப்பட்டது என்று கூறிய அமைச்சர், அதனை நிறைவேற்றுவதற்காக, எந்தவொரு தவறும் இழைக்கப்படவில்லை என்றும் உறுதியாகக் கூறினார்.