Breaking
Tue. Dec 31st, 2024

கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவிற்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர இடமில்லாத பிரச்சினைக்கு, மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்வினைப் பெற்றுத்தருவற்கு நடவடிக்கையெடுப்பதாக, கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று மாலை (28) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் வாகரை பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் சந்திரபால ஆகியோரது தலைமையில் இடம்பெற்ற போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவிற்குள் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு நிரந்தரமான இடமில்லாமல், ஒரு வாரமாக அப்பகுதிக்குள் குப்பைகள் அகற்றப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வாழைச்சேனை பிரதேச சபை பிரிவிற்குள் சேர்க்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் குப்பைகளை செங்கலடி பிரதேச சபைப் பிரிவிலும், உக்கக்கூடிய குப்பைகளை ஓட்டமாவடி பிரதேச சபைப்பிரிவிலும் கொட்டுவதற்கு, செங்கலடி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகள் அனுமதியளித்துள்ள போதிலும், உக்காத குப்பைகளையும் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குள் கொட்டுவதற்கு தற்காலிகமாக அனுமதி கோரப்பட்டு தொடர்ந்து கொட்டி வந்த நிலையில், உக்காத குப்பைகளை ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கொட்டுவற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் குப்பைகள் பிரதேச சபை பிரிவில் அகற்றப்படாமல் உள்ளது.

உக்கக்கூடிய குப்பைகளை தரம்பிரித்து கொட்டுவதற்கு ஓட்டமாவடி பிரதேச சபை அனுமதியளித்துள்ளதுடன், உக்காத குப்பைகளைக் கொட்டுவதற்கு பொறுத்தமான இடத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நடவடிக்கையெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் போது, பிரதேசத்தின் சுகாதாரம், கல்வி, வீதி அபிவிருத்தி, குடிநீர், சுற்றுலா துறை, மீன்பிடி, கூட்டுறவுத் திணைக்களம் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வுகளும் பெறப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் இவ்வாண்டு கிராம சக்தி, மீள்குடியேற்ற, மீன்பிடி, வீடமைப்பு, கம்பரலிய ஆகிய 52 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், 14 வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீதி வேலைகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வேலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவம்பர் மாதத்திற்குள் முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இணைத்தலைவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்ஜித், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

 

Related Post