எங்களுடைய வாழ்க்கையில் மறக்கவேண்டிய விடயங்களைப் போன்று நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயங்களும் இருக்கின்றன.
மறக்க வேண்டிய விடயங்களை மரணத்தறுவாய் வரைக்கும் கொண்டு செல்ல முயற்சிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
அங்கொடை கொஹிலவத்த கங்காதிலக்க விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
முப்பது வருட யுத்தம் இன்று சிலருக்கு மறந்திருக்கின்றது. யுத்தத்தில் முன்னின்று போராடிய இராணுவத்தினரை சிறைகளில் அடைக்க முயற்சிக்கின்றனர். சிறிய குற்றங்களுக்கும் தண்டனை வழங்குகின்றனர். வெற்றிபெறுவதுபோல் தோல்வியுறுவோம்.
அது சாதாரண விடயம். நாங்கள் வெற்றிபெற்றும் இருக்கின்றோம் தோல்வியடைந்தும் இருக்கின்றோம்.
இரண்டும் எங்களுக்கு பழக்கம். அரசியலுக்காக சிறைச்சாலைகளுக்கும் சென்றிருக்கின்றோம்.
கோபம், விரோதம், வைராக்கியம், பழிவாங்கல்களை கைவிட்டு நாட்டையும் சமூகத்தையும் முன்நோக்கிக் கொண்டு செல்வதே இன்றையதேவையாக இருக்கின்றது.
இன்று நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. சிறுவர்களைப்போல் முதியவர்களும் பலதரப்பட்ட அழுத்தங்களுக்கு ஆளாகுவதாக அறியக்கிடைக்கின்றது.
அவர்களை பாதுகாக்க வேண்டும். போயா தினத்தில் கூட விஹாரைகளுக்கு செல்லாதவர்கள் இருக்கின்றனர். ஆனால், நாங்கள் விஹாரைகளுக்கு செல்வதை சிலர் கேலிக்குள்ளாக்குகின்றனர். விஹாரைகளுக்கு ஏன் பணம் கொடுக்கின்றீர்கள் என கேட்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்த புலி உறுப்பினர் களை விடுதலை செய்கின்றனர். அத்துடன் இராணுவத்தினரை கைதுசெய்கின்றனர்.
நாங்கள் சில் துணி வழங்கியதையும் இன்று குற்றம் எனத் தெரிவித்து பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர். என்னுடைய முன்னாள் செயலாளரையும் விசாரணை செய்துள்ளனர். புத்த தர்மத்தை போஷிப்பதாகவும் பாதுகாப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், இங்கு புதுமையான விடயங்களும் இடம்பெறுகின்றன.
வரவு – செலவு திட்டம் குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அந்தளவுக்கு சிறப்பாக இருக்கின்றது. சிறிது காலம் செல்லும்போது உணர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். கல்விக்கு 6 வீதம் ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அவ்வாறு செய்ய முடியுமென்றால் மிகவும் நல்லது என்றார்.