அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 2010-ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக ஜுலியன் அசாஞ்சே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார் லண்டனில் தங்கியுள்ள அசாஞ்சே-வுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த பிடி வாரன்ட்டை ரத்து செய்யும்படி, ஸ்வீடனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின்மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜூலியன் அசாஞ்சே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும், போலீசார் மற்றும் விசார்ணை நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது வாரன்ட்டை உறுதிப்படுத்தியும் தீர்ப்பளித்துள்ளனர்.