Breaking
Tue. Nov 19th, 2024

52 நாள் அரசியலமைப்புக்கு எதிரான சட்டவிரோத ஆட்சிக்கு ஆதரவளிக்காமையும், எமது கட்சியின் வேகமான வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினாலுமே, விசாரணைகளின் பெயரால் என்னை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கான சதிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியுடன் கைகேர்த்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நபர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் கூட்டுக்களை ஏற்படுத்தவில்லை.  அவ்வாறிருக்கையில், 2015 ஜனாதிபதித் தேர்தலுடன் தேசிய அரசியலில் தலைமைத்துவ மாற்றமொன்றை அனைத்தினத்தவர்களும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், தென்னிலங்கை வாக்களர்களின் செல்வாக்கினால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கவில்லை. அதன் பின்னரான சூழலில் பாராளுமன்றத்  தேர்தல் நடைபெறுகின்றது. இதில் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அதன் பங்காளிகள் அனைவரும் முயற்சிகளை எடுத்திருந்தோம்.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடான நிலைமைகளால் அக்கட்சியில் இருந்த பெரும்பான்மையானவர்களும், பங்காளிக் கட்சிகளும் ஐ.தே.க. தவிர்ந்த கூட்டொன்றில் செல்ல வேண்டி ஏற்பட்டுவிட்டது. திட்டமிட்டபடி நாம் கூட்டணியை அமைத்திருக்கின்றோம். அதற்கு மக்கள் எதிர்பார்த்துள்ள இளம் தலைமையான சஜித்தைத் தலைவராக நியமித்துள்ளோம்.

கேள்வி:- அகதியாக அரசியலுக்கு வந்த ரிஷாத் பதியுதீன் சொற்ப காலங்களில் பாரிய வளர்ச்சி அடைந்துவிட்டார். இதற்குப் பல காரணங்கள் திரைமறைவில் இருக்கின்றனவென்று கூறப்படுகின்றதே?

பதில்:- நான் அரசியலில் சம்பாதித்து கோடீஸ்வரனாகுவதற்காக வரவில்லை. எனது சமூகம் புத்தளம் உள்ளிட்ட அகதி முகாம்களில் சொல்லெண்ணாத் துன்பங்களை அனுபவித்தபோது அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும், அவர்களின் குரலாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தமையால் அதற்கான வழியொன்றைத் தேடியபோதே அரசியலுக்குள் தள்ளிவிடப்பட்டேன். ஆனால், காலவோட்டத்தில் என் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும், ஆதரவும் முஸ்லிம் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுப்பதற்குக் காரணமாகிவிட்டது.

இந்த விடயங்கள் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்றுவிட்டன. முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வளர்ந்து விட்டது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பல இட்டுக்கட்டப்பட்ட கதைகளை கூறவிளைகின்றார்கள். இன்னும் சிலர் என்னை ஓர் இனவாதியாகத் தென்னிலங்கையில் சித்தரித்தார்கள்.

கேள்வி:- ராஜபக்ஷவினரின் கடந்த ஆட்சியில் பங்காளியாக இருந்தபோது எந்தவிதமான விமர்சனங்களுக்கோ குற்றச்சாட்டுக்களுக்கோ இலக்காகாத நீங்கள் 2015இற்குப் பின்னர் பல்வேறு விடயங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவராக மாறியுள்ளீர்களே?

பதில்:- 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான நிலைமைகள் ஏற்பட்டிருந்தபோது, ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானம் எடுத்த முதலாவது சிறுபான்மைக் கட்சித்தலைவராக நானே உள்ளேன்.

அன்று எமது சமூகம் முகங்கொடுத்த நெருக்கடியான நிலைமைகளினால் நாட்டில் ஜனநாயகச் சூழலொன்றை ஏற்படுத்தவேண்டிய அவசரமான அவசியம் எம்மனதில் எழுந்திருந்தது. முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பைப் பாதுகாக்கவேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டிருந்தோம். ஆகவே, மிகுந்த சவால்களுக்கு மத்தியில் அந்த முடிவை எடுத்திருந்தோம்.

நாம் எடுத்த முடிவும், அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையையும் ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷ தரப்பினர் முதலாவதாக அவர்களின் அணியிலிருந்து வெளியேறிய என்னை இலக்கு வைத்தார்கள். பல்வேறு விடயங்களைக் கூறி எனக்கு எதிராகப் பரப்புரைகளைச் செய்தார்கள். முஸ்லிம் மக்களும், பள்ளிவாசல்களும், வர்த்தக நிலையங்களும், சொத்துக்களும் தாக்கப்பட்டபோது அதற்கெதிராக நான் துணிந்து குரல் கொடுத்து வந்தமையால் அவர்களுக்கு என் மீதான கோபம் மென்மேலும் அதிகரித்தே சென்றது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னுடைய அரசியல் செயற்பாடுகளை முடக்கி விட வேண்டுமென்று திட்டமிட்டு செயற்பட்டார்கள்.

பௌத்த மதகுருமாரை எனக்கு எதிராக திசை திருப்பினார்கள். என்னை ஓர் முஸ்லிம் இனவாதியாக சித்தரித்தார்கள். நான் நாட்டின் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் ஒருவர் என்றெல்லாம் பரப்புரைகளை  வெகுவாகச் செய்தார்கள். ஆனால், இவ்வாறு செய்யப்பட்ட எந்தவொரு விடயத்திலோ, சம்பவத்திலோ என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், நான் குற்றவாளி போன்றே தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டு வருகின்றேன். ஆட்சி மாற்றத்தில் பங்கேற்காது இருந்து, அவர்களின் அனைத்து செயற்பாடுகளையும் ஆதரிக்கும் கைபொம்மையாக நான் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. அதற்கு ஒருபோதும் சாத்தியமே இல்லை.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவ குற்றவாளிகளுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் உங்கள் சகோதரர் மீதும், உங்கள் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதோடு நிதி மோசடி தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதே?

பதில்:- 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26இல் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தி 52 நாள் குழப்பத்தை உருவாக்கினார். இந்தக் காலப்பகுதியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத ஆட்சிக்கு நான் உள்ளிட்ட எமது கட்சி ஆதரவளிக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் ராஜபக்ஷ தரப்பினர் இருந்தார்கள். ஆனால், நாங்கள் முறையற்ற ஆட்சி அதிகாரத்தையோ, ஜனநாயக விரோதத்தையோ ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை. இதனால் அவர்களால் அந்தச் சட்டவிரோத ஆட்சியைத் தக்கவைக்க முடியாது போய்விட்டது. இதன் காரணமாக, அவர்கள் மத்தியில் என் மீதான கோபம் அதிகரித்துவிட்டது. அதற்காக என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் ரீதியான அந்தஸ்தை இழக்கச் செய்ய வேண்டுமென்று முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதனை அடியொற்றியே இந்த நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினமன்று நடைபெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுடன் என்னையும் எனது சகோதரர்களையும் தொடர்புபடுத்தி இப்போது விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள். பாராளுமன்ற விசாரணைக்குழு முன் எனக்கோ அல்லது நான் சார்ந்தவர்களுக்கோ அதில் தொடர்பில்லை என்று நிரூபணமாகிவிட்டது. தற்போதுகூட பழிவாங்கும் நோக்கத்துடனேயே என் மீது விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள்.

உண்மையிலேயே எனது தேர்தல் பரப்புரைகள் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கி என்னை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கான நோக்கமே இதன் பின்னணியில் இருக்கின்றது. அதனால்தான் பரப்புரையைக் கூட மேற்கொள்ளவிடாது தடைபோடுகின்றார்கள். 52 நாள் ஆட்சிக்கு நான் ஆதரவளித்திருந்தால் தற்போது இந்த நாட்டின் ‘அபிமானி’ என்று கூறியிருப்பார்கள்.

கேள்வி:- அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்ததன் காரணம் என்ன? இதனால் வாக்குச் சிதறல் இடம்பெறாதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கும் முண்டுகொடுக்கும் அரசியல் இயக்கம் அல்ல. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் பிரதிநிதித்துவ அதிகரிப்பே முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்துவதாக இருக்கப்போகின்றது. ஆகவேதான் முஸ்லிம் பிரதிநிதித்துவ அதிகரிப்பை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் வெவ்வேறு மூலோபயங்களை நாம் கையாண்டிருந்தோம். இதில் யாருடைய வாக்குகளையும் சிதறடிப்பதோ அல்லது முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இழக்கச் செய்வதோ எமது இலக்கு அல்ல. எமது சமூகத்திற்கான பிரதிநிதித்துவ அங்கீகாரத்தைத் தனித்துவத்துடன் அதிகரிக்கச் செய்வதையே நாம் இலக்காகக்  கொண்டிருக்கின்றோம்.

(நேர்காணல்: ஆர்.ராம்)

நன்றி வீரகேசரி 

Related Post