இலங்கையில் கடந்த 10 வருடங்களில் இடம்பெற்றுள்ள பெரும் ஊழல், மோசடிகள் தொடர்பில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா முதலான நாடுகளிடம் பயிற்சி பெற்ற விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் சிலருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் ஊழல், மோசடிகள் இடம்பெறாத வகையில் விசேட விசாரணைப் பிரிவொன்றை இந்த வருடத்துக்குள் நிறுவவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபா நாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது.
அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “இந்த நாட்டில் பெரியளவில்
ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இவை சாதாரணமாக இடம்பெறவில்லை. சிறந்த வர்த்தக அறிவின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளன.
பங்குச்சந்தை விவகாரம், சரியான வர்த்தமானியை வெளியிடாமல் பணம் எடுத்தல், வர்த்தமானிக்கு மேலதிகமாக பணம் எடுத்தல் இவை தொடர்பில் விசாரிக்க வேண்டும்.
திருடர்களுக்காக திருடர்களாக நாம் இருக்கமுடியாது; இந்தச் சபையும் இருக்கமுடியாது.
எனவே, இவ்வாறான பெரும் மோசடிகளை விசாரிக்க விசேட விசாரணைப் பிரிவொன்றை நிறுவ நாம் முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதற்காக பிரிட்டனின் விசேட பிரிவிலுள்ள குழுவினர் நிதி அமைச்சரை சந்தித்துள்ளதுடன், பயிற்சிகளையும் வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் நிதி குற்ற விசாரணைப் பிரிவும் பயிற்சி வழங்குகிறது. அமெரிக்க அதிகாரிகளும் பயிற்சி வழங்கியுள்ளனர். உலக வங்கியிலுள்ள விசேட விசாரணைப் பிரிவிலும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
ஊழல், மோசடிகளைத் தேட முற்பட்டதும், சிலருக்கு வயிற்றோட்டம் போகிறது. இவை யாவும் ஒருபோதும் வெளிவராது என மூடிக்கொண்டு சென்றனர்.
ஆனால், நாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். நாட்டில் மீண்டும் ஊழல், மோசடிகள் இடம்பெறாத வகையில் விசேட விசாரணைப் பிரிவை இவ்வருடத்துக்குள் நிறுவவுள்ளோம்.
இந்தக் குழுவுக்கு மேலும் தேவையேற்படின், பிரிட்ட னுக்கு அனுப்பி பயிற்சிகள் பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்க்கிறோம்.
கடந்த 10 வருடங்களில் ஊழல், மோசடி பற்றி விசாரிக்க பொலிஸாருக்கோ அல்லது வேறு எவருக்கோ இடமளிக்கப்படவில்லை. இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் ஆயிரத்து 900 எழுத்தாவணங்கள் உள்ளன. இவற்றை விசாரணை நடத்துவோம்” ? என்றார்.