தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட பஸ் சேவை மற்றும் புகையிரத சேவைகள் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அம்பாறை, நுவரெலியா, ஹட்டன், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ் விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விசேட சேவைக்காக 2000 மேலதிகமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி பொது மக்களின் போக்குவரத்து வசதி கருதி தற்காலிகமாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பஸ், வான் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேவேளை சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் கொழும்புக்கு திரும்பி வருவதற்காக விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சேவைகளில் ஈடுபடும் சாதாரண மற்றும் சொகுசு பஸ் வண்டிகளில் அதிக கட்டணம் பெறப்பட்டால் அது தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் விசேட பஸ் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மலையகம் கடற்கரையோர புகையிரத சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.