மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் வாசித்து காட்டினால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தான் விடுபட சாத்தியமுள்ளது என நீதவானிடம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
குறித்த படுகொலை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மன்றிற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 12 சந்தேக நபர்களையும் நோக்கி நீதிவான் ஏதாவது உங்கள் சார்பாக விண்ணப்பங்களை மேற்கொள்ள உள்ளீர்களா? எனக் கேட்டார்.
இதன்போது 5வது சந்தேக நபரான மகாலிங்கம் சசிந்திரன் தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனை செவிமடுத்த நீதவான் இந்த விடயத்தை சிறைச்சாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு உத்தரவிடுவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை மற்றுமொரு 3வது சந்தேகநபரான பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் மரபணு பரிசோதனை அறிக்கையை இங்கே வாசித்து காட்டினால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தான் விடுபட சாத்தியமுள்ளது என நீதவானிடம் கூறினார்.
இதனை அடுத்து நீதவான் மரபணு பரிசோதனை அறிக்கையை வாசிப்பதனால் இங்கே உங்களால் விளங்கிக்கொள்ள முடி யுமா? அதனை பொறுமையுடனும் ஆழமாகவும் வாசிக்கப்பட வேண்டும்.
அது மாத்திரமல்ல, அவ் வறிக்கை தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டும். தற்போது குறித்த வழக்கு தொடர்பாக அனைத்து அறிக்கைகளும் விசாரணை செய்யப்பட்டு நிறைவுற்ற நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே சற்று பொறுமையாக இருந்தால் உண்மை வெகு விரைவில் வெளிவரும் என கூறினார்.
மேலும் இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என்பதுடன் குற்றப்புலனாய்வு அதிகாரி மன்றில் ஆஜராகி இருந்தார்.
அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.