நாடுபூராகவும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்சார தடைக்கு பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிகாலை 3.30 க்கும் 4.00மணிக்கும் இடையில் நிலைமை வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சாரசபை தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் நாடுபூராகவும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே இதற்கான பிரதான காரணமாகும். என்றாலும் சில மணித்தியாலங்களுக்குள் மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதனடிப்படையில் 3.30க்கும் 4மணிக்கும் இடையில் நாடுபூராகவும் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியது.
இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட தொழில்நுட்ப கோளாறு ஏற்படக் காரணம் என்ன என்பதை கண்டறிவதற்காக விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன் இதன்மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுத்துக்கொள்வதற்கு முடியுமென நம்புகின்றேன்.
எவ்வாறாயினும் இதன்காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் கவலையடைகின்றேன் என்றார்.
இதுதொடர்பில் மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவிக்கையில்,
குறைந்தளவான கேள்வி காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டமைப்பிற்கு அதிகளவான மின்சாரம் கிடைத்தமையே நாடுபூராகவும் மின்சாரம் தடைப்படுவதற்கு காரணமாகும்.
நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் குறைந்தளவிலான கேள்வியே நிலவியது. என்றாலும் மின்விநியோக கட்டமைப்பிற்கு அதிகளவில் மின்சாரம் கிடைத்தது. இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.