டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த GE235 என்ற விமானம் 58 பேருடன் புதன்கிழமை தாய்வான் தலைநகர் தாய்பேயில் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களுக்குள் கட்டங்களை உரசியவாறு பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது.
இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை 40 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்தில் சிக்க முன் அதன் இரு எஞ்சின்களுமே அவற்றிட்கான எரிபொருள் துண்டிக்கப் பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமான விபத்தில் 15 பேர் உயிர் தப்பியுள்ள போதும் இன்னும் 3 பேரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விமானம் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களில் இரு எஞ்சின்களுமே இயங்க மறுத்து விட்டதால் தான் அது விபத்தில் சிக்கியது என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. நிலமை மோசமான போது அதனை சமயோசிதமாகக் கையாண்டு பைலட்டுக்கள் செயற்பட்டு ஓர் எஞ்சினையாவது மீள இயங்க வைத்த போதும் அதற்குள் மிகவும் கால தாமதமாகி விட்டதால் விமானம் ஆற்றில் வீழ்ந்துள்ளது. ஆனாலும் சில உயிர்களையாவது காப்பாற்ற முடிந்துள்ளமையால் அதிகாரிகள் இதற்காக இறுதி வரை போராடிப் பலியான பைலட்டுக்களை ஹீரோக்கள் எனவும் புகழ்ந்துள்ளனர்.
திடீரென எஞ்சின்கள் செயலிழந்தமைக்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காக ஆற்றில் சிதைவடைந்துள்ள இறக்கைப் பாகங்கள், எஞ்சின்கள் மற்றும் காக்பிட் என்பவற்றை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் கண்டு எடுக்கப் பட்டுள்ள விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மற்றும் காக்பிட் ஒலிப் பதிவு கருவி ஆகியவற்றை ஆராய்ந்து தகவல்களைப் பெற சில மாதங்கள் ஆகலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.