Breaking
Mon. Dec 23rd, 2024

ஜனவரி 8 மாற்றம் நிகழ்ந்திருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை எத்தகையதாக இருந்திருக்கும் என அரசாங்கத்தையும் தம்மையும் விமர்சிக்கின்ற எல்லோரிடமும் தாம் கேட்க விரும்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த அனுபவங்களின்றி சிலர் நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவருகின்ற செயற்பாடுகளை விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அவற்றுக்கு அவர்களிடம் உள்ள தீர்வுகளை முன் வைக்குமாறு தாம் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்கவினால் எழுதப்பட்ட ”நான் கண்ட ஜனவரி 08” நூல் வெளியீட்டு விழா நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனவரி 08ஆம் திகதி கிடைத்த வெற்றியின் பெறுபேறுகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவ்வெற்றிக்காக உழைத்த எல்லோருடையதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டுக்காக இன்று நாம் செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனவரி 08 வெற்றிக்கு பங்களித்த, பங்களிக்காத எல்லோருக்கும் தாம் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனவரி 08 மாற்றத்தை உண்மையாகவும் யதார்த்தமாகவும் கண்டு அது குறித்து எழுதிய ஆயிரக் கணக்கானவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அதனை மிகச் சரியாக எழுதியுள்ளார்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி, சமூக நீதி, சுதந்திரம், ஜனநாயகம் தொடர்பாகவும் ஊழல் மோசடிகள், அநீதிகள் தொடர்பாகவும் எழுதுகின்ற பலருக்கு ஜனவரி 08 மாற்றம் குறித்து உண்மையாக எழுதுவதற்கு இன்னும் முடியாமல் இருப்பது குறித்து தாம் கவலையடைவதாகவும் தெரிவித்தார்.

ஜனவரி 08 மாற்றம் தொடர்பான பல உண்மைகள் இன்னும் மறைந்திருப்பதாகவும் அவற்றை அச்சமின்றி வெளிக்கொண்டு வருவதற்கு ”நான் கண்ட ஜனவரி 08” நூலின் மூலம் மலித் ஜயதிலக்க எடுத்துள்ள இந்த முயற்சியை தாம் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனவரி 08 மாற்றம் அரசியலில் எவ்வளவு தூரம் சிக்கலானதொன்று என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதும் அது பற்றி அறிந்துள்ள எல்லோருக்கும் நன்கு தெரியுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அம்மாற்றம் தொடர்பாக பேசப்பட வேண்டியவை பேசப்பட வேண்டியவர்களால் பேசப்படுவது இன்று மிகவும் முக்கியமாகும் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றிபெற முடியாது என மலித் ஜயதிலக்கவினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மற்றும் புள்ளிவிபர ஆய்வு இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளதுடன், 2012ஆம் ஆண்டுமுதல் ஒரு பொது அபேட்சகரை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் செயற்பாடுகளில் இறுதியாக அப்போது அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன பொது அபேட்சகராக தெரிவுசெய்யப்பட்ட முழு விபரமும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது அபேட்சகருக்கு தேர்தல் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுகள் குறித்தும் இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.

இணக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தேர்தலில் பொது அபேட்சகருக்காக நேரடியாக செயற்பட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By

Related Post