மக்களின் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவம் தீர்வன்று என்பதை மீள வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அலரிமாளிகையில் எங்களுக்கும் அறை இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அலரிமாளிகையில் எங்களுக்கு அறையில்லை. ஆனால், விரைவில் அதனை கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளது.
ஹெவலொக் நகரத்தின் பி.ஆர்.சி மைதானத்தில் நேற்று (1) இடம்பெற்ற, ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திலேயே இக்கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. ஒன்றுகூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய ஜே.வி.பி அநுர குமார திஸாநாயக்க,
‘தற்போது, வடக்கிலும் தெற்கிலும் கூட, மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாட்டை ஆளும் திறனற்றதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க அரசியல்வாதிகளைத் தோற்படிப்பதற்கான பாரிய போராட்டமொன்று மக்களிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் கட்சிகள் இரண்டும், அரசியல் செய்யக்கூடப் பொருத்தமற்றவை, பிறகெவ்வாறு அவர்கள் நாட்டை ஆள முடியும்?
மிகுந்த திறமைகொண்ட அரசியல்வாதியாகவும், பொருளாதார நிபுணராகவும் தம்பட்டம் அடித்துக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை இன்னும் பல பிரச்சினைகளுக்குள் இழுத்துக் கொண்டுள்ளார். பிரதமர் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த முதலாளித்துவக் கட்டடைப்பே, முழு உலகத்தையும் வீழ்த்தியுள்ளது’ என அவர் குறிப்பிட்டார்.