Breaking
Sun. Dec 22nd, 2024
-ஊடகப் பிரிவு –
வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் நேற்று (03/09/2016) மன்னாருக்கு விஜயம் செய்த, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மன்னார் கச்சேரியில் பங்கேற்றிருந்த கூட்டத்திலேயே, அரசாங்க அதிபர் இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகளின் நிலங்களைப் பாதுகாத்தல், மன்னார் மாவட்டக் கிராமங்கள், பாதைகள் ஆகியவை அண்மையில் வர்த்தமானி பிரகடனத்தின் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டமை மற்றும் வங்காலை கிராமத்தின் ஒரு பகுதி பறவைகள் சரணாலயத்துக்கு உரித்துடையது என பிரகடனம் செய்யப்பட்டமை ஆகியவை தொடர்பில் இந்த உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்றது.
மன்னார் அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அரசஅதிபர் தலைமை உரையாற்றும்போது மேலும் கூறியதாவது,
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும், மன்னார் மாவட்டத்தில் பொறுப்பான உயரதிகாரி என்ற வகையிலும், இந்த மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான எந்தக் காணியிலும், துளியளவிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பதை, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா முன்னிலையில் மிகவும் உறுதியுடன் கூறிக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
பிழையான குடியேற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டதிட்டங்களைப் பேணி மீள்குடியேற்றத்தை மேற்கொண்டு வருகின்றார் என்பதையும், இந்தக் கூட்டத்தில் கூறுவது எனது கடமையாகும் என்று தெரிவித்தார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் வனஜீவராசிகளின் நிலங்களைப் பாதுக்காப்பது தொடர்பிலும், வங்காலை கிராமப்பிரச்சினை, அண்மைய  வர்த்தமானிப்  பிரகடனங்கள், பெரியமடு, மடு பிரதேசங்களின் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமானவை என பிரகடனப்படுத்தப்பட்டமை ஆகியவை தொடர்பிலும் ஆராயப்பட்டு, எதிர்காலத்தில் எவ்வாறு  இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது என்பது தொடர்பிலும் எடுத்தாளப்பட்டது.
மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்டேன்லி டி மெல் உட்பட உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
\14222104_1404066409609550_583165526342083352_n 14184507_1404066219609569_176171074176912279_n

By

Related Post