நாம் கதையை போகஸ்வெவவிலிருந்தே ஆரம்பிக்கவேண்டியுள்ளது. போகஸ்வெவ கருவலங்காலிகுளம் என்பது இலங்கையின் மிகப் பெரிய வனப் பாதுகாப்பு சரணாலயமாகும். இந்த வனப் பாதுகாப்பு சரணாலயத்தின் 5,000 ஏக்கர் அளவிலான வனம் அழித்து போகஸ்வெவ என்ற ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய குடியிருப்புக்களை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பித்தது ஹம்பாந்தோட்டையின் வீரன் நாமல் ராஜபக்ஷ. அது இப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்த, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் நோக்கத்தில் மாத்திரமேயாகும். இது இலங்கையில் கிட்டிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய காடழிப்பாகும்.
கருவலங்காலிகுளம் வன பாதுகாப்பு சரணாலயத்தில் காடழிப்பு இடம்பெறுவதை வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வன பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இப்பிரதேசத்துக்கு வரவேண்டாமென்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இப்போது இரண்டு வருடங்களைத் தாண்டி பல வருடங்கள் கடந்துவிட்டன. கருவலங்காலிகுளம் பற்றி யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. கண்ணில் தென்படும் அனைத்துவிடயங்களுக்கும் கண்மூடித்தனமாக கைதூக்கும் பேஸ்புக் வீரர்களும் கருவலங்காலிகுளத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. கருவலங்காலிகுளம் என்பது தமிழ் பெயரொன்றாக இருக்கின்ற காரணத்தினாலாகும். வெட்டப்பட்டதும் தமிழ் மரங்களே. அவற்றை அழித்ததற்கு பரவாயில்லை என்ற கோணத்தினாலாகும்.
வில்பத்துவை பாதுகாப்போம்
இது அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் பெற்றிருக்கும் போராட்டமொன்றாகும். இளைஞர், யுவதிகள் வில்பத்து சரணாலயத்துக்காக உயிரைக்கொடுக்கவும் முன்வந்துள்ளனர். சுற்றாடலியல் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர். தேரர்களும் வில்பத்துவை பாதுகாக்க முன்வந்துள்ளனர். அமைச்சர் றிஷாத் பதியுதீன் உட்பட முஸ்லிம்கள் சிலர் இந்த வனத்தை அழிப்பதே இதற்கான காரணமாகும். இன்னும் சில சுற்றாடல் அமைப்புகள் வில்பத்து வனத்தை போஷிக்கும் வடிகால் கல்லாறு வனாந்திரம் அழிக்கப்படுவதால் தாம் ஆர்ப்பாட்டத்தில் குதித்ததாகக் கூறுகின்றனர்.
எனினும் பேஸ்புக் வீரர்களுக்கு வில்பத்து குறித்தோ, கல்லாறு குறித்தோ போதிய அறிவிருக்கவில்லை. அவர்களின் போராட்டம் தொடர்ந்தும் வில்பத்துவை பாதுகாப்பதாகவே இருக்கின்றது. இதற்காக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வோர், சுற்றாடலுக்கு அன்பு செலுத்துவோர் மற்றும் மரங்களை நடுவோரும் உருவாகினர்.
வில்பத்து தொடர்பான கதையை மீள்வாசிப்புக்கு உட்படுத்தவும், மீள் எழுதவுமே இந்த கட்டுரை. எம்மிடம் கருத்து தெரிவித்த வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வடக்கு காடுகள் தொடர்பாக நீண்ட கால ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் சுற்றாடலியலாளர் திலக் காரியவசம் ஆகியோர் வில்பத்து தொடர்பாக கதையை எமக்கு தெளிவுபடுத்தினர்.
முஸ்லிம் கிராமங்கள்
வில்பத்து 1943ஆம் ஆண்டு தேசிய சரணாலயமாக 43,000 ஹெக்டெயார்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. வில்பத்து சரணாலயத்திற்கருகில் காணி உரிமையற்ற இடமொன்றில் இவர்கள் வாழ்ந்துவந்தார்கள். அங்கு முஸ்லிம், தமிழ் மக்கள் இருந்தார்கள். இப்பிரதேச முஸ்லிம்கள் இரகசிய தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்குவதாக விடுதலைப் புலிகள் சந்தேகித்தனர். இதன் காரணமாக 1990ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த மக்கள் இருப்பிடமின்றி அவதிப்பட்டனர். 1990ஆம் ஆண்டு இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் 2002 சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இங்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் அங்குமிங்குமாக நடமாடியபோது, அவர்களின் கிராமங்களில் எதுவுமே எஞ்சியில்லை என்பதை உணர்ந்தனர். எல்லா எதிர்பார்ப்புகளும் சின்னாபின்னமான நிலையில் மீண்டும் கல்பிட்டியைச் சூழவுள்ள பிரதேசங்களில் குடியேறினர். திலக் காரியவசம் வில்பத்துவின் வரலாறு குறித்து தெளிவுபடுத்தினார்.
இந்த பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்துவந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. காடுகள் ஆக்கிரமித்துள்ள இப்பிரதேசத்தில் சேதமடைந்த வீடுகளின் சிதைவுகள் ஏராளமாக இருப்பதாக வன பாதுகாப்பு அதிகாரிகளும் கூறுகின்றனர். 1990ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை 25 வருடங்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள காடுகளை நோக்கும் எவராக இருந்தாலும் இது கல்லாறு வன பாதுகாப்பு பகுதி என்றே நினைத்துவிடக்கூடும். பழைய ஆவணங்களிலும் இந்த மக்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் கண்டுகொள்ளலாம் என்று திலக் காரியவசம் தெரிவித்தார்.
சிலோன் ஹொப்மான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுற்றாடலுக்கு அன்புசெலுத்திய ஒருவர். சிங்கராஜவனம் தொடர்பிலும் அவரது பங்களிப்பு மகத்தானது. அவர் அடிக்கடி வில்பத்து சென்றுவருபவர். அவரது குறிப்புகளிலும் இக்கிராமங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது. றிஷாத் பதியுதீன் குடியேங்களை மேற்கொள்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளார்கள்.
வடக்கின் வசந்தம்
யுத்த காலத்திலும் வில்பத்து குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லை. எந்தவொரு அதிகாரியும் இன்றியும் வனம் நிலைத்திருந்தது. எல்லைகள் பற்றிய போதிய தெளிவின்மை காரணமாக வனத்தை பாதுகாப்பதிலும்
சிக்கல் ஏற்பட்டது. யுத்தம் காரணமாக இருபது, முப்பது வருடங்களாக மனித நடமாட்டமின்மையால் காடு அடர்ந்திருந்தது.
இதுதொடர்பான கரிசனையின்றி கடந்த அரசாங்கமும் இராணுவத்தினரும் செயற்பட்டனர். அப்போது வில்பத்து வனத்தருகே கடற்படை முகாமொன்றும் இருந்ததோடு, அதனை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. வடக்கின் வசந்தத்தை முன்னெடுத்த பசில் ராஜபக்ஷவுக்கும் சூழல் பற்றிய அக்கறையிருக்கவில்லை. அந்த காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தது றிஷாத் பதியுதீன். எனினும் சில காலங்களில் அவரது அமைச்சுப் பதவி பறிபோனது. எனினும் மாவட்ட இணைப்புக் குழு கூட்டங்களில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து அவர் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்தார். அவர் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதும் இதற்கான பிரதான நோக்கமாகும். அவரது வாக்கு வங்கியை நிறப்பிக்கொள்வதும் நோக்கமாக இருந்தது.
மேலும், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் முதல் கட்டமாக அனைத்து அரச அலுவலகங்களையும் ஒன்றுதிரட்டி சுற்றாடல் பகுப்பாய்வு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது. எனினும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கையில் வன பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தும் இடங்கள் எவை? சுற்றாடல் முக்கியத்துவமிக்க இடங்கள் எவை? போன்ற விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டது. பசில் ராஜபக்ஷ இந்த விடயங்களை மறைத்தார். வில்பத்து நடுவே பாதையொன்றை அமைப்பதே பசில் ராஜபக்ஷவின் திட்டமாகும். எமது அமைப்பு உட்பட 5 சூழலியல் அமைப்புகள் இதற்கெதிராக வழக்கு தாக்கல் செய்தோம். பசில் ராஜபக்ஷ வில்பத்து நடுவே கடலுக்கு மீற்றர் 500 அளவிலான தூரம் இருக்க பாதை அமைக்க முயற்சித்தார். அதனால் பாதைக்கும் கடலுக்குமிடையிலான பிரதேசத்தை கைப்பற்றிக்கொள்ள முடியும். காட்டருகே உள்ளதாலும், காட்டு விலங்குகள் இருப்பதலும் இலகுவாக ஹோட்டல்களை அமைக்கலாம். எனினும் நாம் அந்த முயற்சியை தடுத்துவிட்டோம் – என்று திலக் காரியவசம் வடக்கின் வசந்தம் குறித்து தெளிவுபடுத்தினார்.
வன பாதுகாப்பு
வடக்கின் வசந்தம் காரணமாக காடுகளை பாதுகாத்துக்கொள்வதில் சிக்கல் தோன்றியது. இதற்காக வன பாதுகாப்பு திணைக்களம் கருமமாற்ற வேண்டியிருந்தது. வில்பத்து பிரச்சினைக்கு முன்பு பசிலிடம் இருந்து இடங்களை பாதுகாத்துக்கொள்ளும் தேவையிருந்தது. இதுவிடயமாக மேலதிக தகவல்களை வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையில் கண்டுகொள்ளலாம். அந்த அறிக்கையிலிருந்து எடுத்துக்கொண்ட விடயமொன்றே கீழ் வருகின்றது.
மீள்குடியேற்றத்தை காலதாமதமின்றி செயற்படுத்த 2009.05.07 வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பசில் ராஜபக்ஷவும், செயலாளராக எஸ். திவாரத்னவும் செயற்பட்டார்கள். இந்த செயலணி பாதுகாப்பு பிரிவு மற்றும் அரசின் ஏனைய பிரவுகளுள் இணைந்து இடத்தை தெரிவு செய்து, துப்புரவுசெய்ய ஆரம்பித்தனர். வன பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்குக்கான பணிகள் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே ஆரம்பமானது. நிலக் கண்ணிவெடிகள் அகற்றியிருக்காத காரணத்தினால் இவ்விடயங்களில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது. 2012.07.06 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வன பாதுகாப்பு ஆணையாளருக்கு அழைப்புவிடுக்கப்பட்டு கலந்துகொண்டிருந்தார். அரசுக்கு தேவையான இடத்தை உடன் பரிந்துரை செய்யுமாறு பணிப்புரை வழங்கப்பட்டது.
இந்த குழு மன்னார் மாவட்டத்திற்கு கோரியுள்ள இடம் தொடர்பாக கலந்துரையாடி, 2012.11.15ஆம் திகதி அறிக்கை சமர்ப்பித்தது. மேற்படி குழுவின் அறிக்கைகள் தொடர்பாக ஆராய முன்னரே காடுகள் துப்புரவு செய்யப்பட்டிருந்ததால் காணிகளை விடுவித்தனர். மன்னார் மாவட்டத்தில் 1,080 ஏக்கரும், வவுனியாவில் 325 ஏக்கரும், முல்லைத்தீவில் 983 ஏக்கரும் அமைச்சரவை அனுமதியுடன், முறையாக பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. வன பாதுகாப்பு திணைக்களத்தால் மக்களுக்கு பகிர்ந்தளிக்க
வேண்டிய காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தது. ஏனைய காணி விடுவிப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யுத்த முடிவின் போது காடுகள் மாத்திரமின்றி, மக்கள் வாழ்ந்த சாதாரண பிரதேசங்களையும் காடு ஆக்கிரமித்திருந்தது. அவற்றை துப்புறவு செய்யும் வேலைகள் வேகமாக நடைபெற்றது. துப்புரவு செய்யப்பட்டுவரும் காடுகளை பாதுகாப்பது வன பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பாகும். நிலக் கண்ணி வெடியும் இதற்கு தடையாக அமைந்தது. இதனால் செயற்கைக் கோள்களின் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டு, அடர்த்தியான காட்டு பிரதேசங்களை அடையாளமிட்டு, முன்னர் இருந்த காடுகளின் படங்களுடன் ஒப்பிட்டு, ஊகங்களின் அடிப்படையிலேயே வன பாதுகாப்பு பிரதேசங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவை ஒழுங்கான அளவுமுறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தனியார் இடங்களும் காவுகொள்ளப்பட்டதோடு, இது தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடொன்றேயாகும்.
இந்த செயற்பாட்டின் மூலம் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்து, எல்லைகளை குறித்து, காணி அளவிடைகளின் பின்னரே மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை பிரகடனப்படுத்த வன பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டிருந்தது. 2014ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெரும் பகுதி நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோரை மீள்குடியேற்றும் மேற்படி விதிமுறைகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் பிச்சாய் வன்னியாகுளம் எனப்படும் விளாத்தி குளத்தின் பகுதியொன்றும் வில்பத்து பகுதிக்கு காவுகொள்ளப்பட்டுள்ளது. வன பாதுகாப்பு ஆணையாளரின் 2013.04.09 கடிதத்தில் மன்னார் விளாத்திகுளம் பகுதி அடையாளங்களை அளப்பதற்கு பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார். நில அளவைத் திணைக்களத்தால் அளந்து அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அதன் பரப்பளவு 2,698,953 ஹெட்டெயார்களாகும். வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு ஆகாய மார்க்க தூரம் 12 கிலோமீற்றர்களாகும். இது 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதாகும். மேலும் இப்பிரதேசத்திலிருந்த மரக் கட்டைகள் மற்றும் விறகுகளை வில்பத்துவை பாதுகாப்பது குறித்து சிந்திக்க முன்னரே அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
மன்னார் பிரதேச செயலாளரால் 2013.03.27ஆம் திகதி கடிதத்தின்படி அரச மர கூட்டுத்தாபனத்தின் அநுராதபுர பிரதேச முகாமையாளரைத் தொடர்புகொண்டு அங்கிருந்து விடுவிக்கப்பட இருந்த வணிக பெறுமதிமிக்க அனைத்தையும் பட்டியலிடப்பட்டுள்ளது. மர கூட்டுத்தாபனத்தால் பெருமதிமிக்க மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் வன பாதுகாப்பு அதிகாரி 2013.05.22 கடிதத்தின்மூலம் பிச்சாய் வன்னியாகுளம் பாதை பகுதி இடத்தை முசலி பிரதேச செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2014.10.12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி அபிவிருத்தி சட்டமூலத்தின் 19(2) பிரிவின் அடிப்படையில் விடுக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்திம் 944 பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிப் பத்திரம் கிடைத்தவர்கள் பல்வேறுபட்ட அமைப்புகளின் நிதியுதவியில் தமது நிலப்பரப்பில் 2014ஆம் ஆண்டிலிருந்து குடியிருப்புகளை அமைக்க ஆரம்பித்தனர்.
வில்பத்து சரணாலயம் பாதிப்படையும் என்பதனால் இதுவரையில் எல்லைகள் 94 கிலோமீற்றர் வரையில் வேலியடிக்கப்பட்டுள்ளது. வில்பத்துவுடன் தொடர்புபட்டுள்ள வெப்பால், மாவில்லு, மறிச்சிகட்டிய ஆகிய காடுகளும் தனித்தனி காடுகளாக பிரகடனப்படுத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மேற்படி தகவல்களின் அடிப்படையில் இப்பகுதியில் மரக்கட்டைகளை அப்புறப்படுத்தும் வேலைகள் 2014 இல் நிறைவடைந்து, அனுமதிப் பத்திரமுடையவர்கள் வீடுகள் அமைக்க ஆரம்பித்தனர். இதனடிப்படையில் அண்மையில் ஊடகங்கள் வில்பத்து பகுதியில் புதிதாக காடழிப்பு இடம்பெற்று வருகின்றதென்று முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை.
வில்பத்து
சூழலியலாளர் திலக் காரியவசம் போன்றோரின் குறுக்கீட்டால் மஹிந்த ராஜபக்ஷக்களிடமிருந்து வில்பத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. வில்பத்து எல்லையிலிருந்து கிலோமீற்றர் 10க்கும் அதிக தூரத்திலுள்ள விலத்திகுளம், கல்லாறு, மறிச்சுகட்டிய வனங்களையும் பாதுகாக்க வன பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ளது அனைத்துமே மக்களின் பாரம்பரிய இடங்களாகும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமே என்று சிங்களவர்கள் கூறுகின்றனர். அவர்கள் யுத்தம் பற்றி எதனை தெரிந்து வைத்துள்ளார்கள்? யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்தவர்கள் இந்த மக்களே. முக்கியமாக அவர்களின் காணிகளை காடுகள் ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவுக்கு துன்பங்களை அனுபவித்த அப்பாவிகள் அவர்களே. அவர்களின் மீள்குடியேற்றத்துக்கு மீண்டும் இடமளிக்கப்படவேண்டும். சுற்றாடலியலாளர்கள் கவலையடையத் தேவையில்லை. அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் எவ்வளவோ எஞ்சியுள்ளது. எவ்வளவோ காடுகள் இன்றளவில் அழிக்கப்படுகின்றன. அதிகமான காடுகள் அழிக்கப்படுவது சிங்கள பௌத்தர்களாலாகும்.
பேஸ்புக் வீரர்களுக்கும், மரம் நடுபவர்களுக்கும் மேற்கொள்வதற்கு எவ்வளவோ வேலைகள் எஞ்சியுள்ளன. அப்பாவிகள் பல வருடங்கள் கடந்து பூர்வீகங்களுக்கு திரும்பும்போது அதற்கு தடையேற்படுத்துவது மனிதாபிமானமா? (நு)
-ரேகா நிலுக்ஷி ஹேரத், தமிழில்: ஆதில் அலி சப்ரி-
(நன்றி ராவய)