வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும், அதனை வனஜீவிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை மறிச்சுக்கட்டியில் வாழும் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் அபகரிப்பதற்காகவாகும்.
இது ஜனாதிபதியின் தவறான முடிவாகும். ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் என்னும் இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மேற்கொள்ளும் இச்செயல் திட்டமிட்ட சதியாகும்.
ஜனாதிபதி தனது பிழையான முடிவினை மாற்றிக்கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்கு தயாராக இருக்கிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வில்பத்து வன பிரதேசத்தை விரிவுபடுத்தி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் தொடர்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பங்களிப்புச்செய்த முஸ்லிம்களின் இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளுக்கு ஜனாதிபதி துரோகம் செய்ய எத்தனித்துள்ளமை மக்களை கவலையடையச் செய்துள்ளது.
நாட்டின் தலைவராக, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியிலமர்த்த பங்களிப்பு செய்த முஸ்லிம்களை அவர் கறிவேப்பிலையாக கருதியிருக்கின்றார்.
மறிச்சுக்கட்டி பிரதேசம் வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமானதென 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளமை முறையான விதிகளைப் பேணாது மேற்கொள்ளப்பட்டமையே பிரச்சினைக்குரிய காரணமாகும். யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மக்களின் காணிகள் அவர்களுக்கே தெரியாது, அறிவிக்கப்படாது, வனபரிபாலன திணைக்களத்தினால் கையேற்கப்பட்டு, வேலி அமைக்கப்பட்டு, அறிவித்தல் பலகையும் இடப்பட்டுள்ளது.
இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு 2015 ஆம் ஆண்டிலே தமது காணி கையேற்கப்பட்டுள்ளமை அறியக் கிடைத்துள்ளது. இது இம்மக்களுக்குச் செய்யப்பட்ட பாரிய துரோகமாகும்.
மக்கள் அகதிகளாக தமது காணிகளிலிருந்தும் வெளியேறியிருக்கும்போது யாருக்கும் தெரியாது வனபரிபாலன திணைக்களம் கையேற்றுள்ளது.
முசலி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி பிரதேச கால்நடை வளர்ப்பு, விவசாயம் என்பவற்றுக்கு உட்பட்டிருந்த இப்பிரதேசத்தை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்துவது பிழையான முடிவாகும். ஜனாதிபதியின் கூற்றுப்படி மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலக்குழி, கொண்டச்சி, முள்ளிக்குளம் பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாகவுள்ளனர்.
அளக்கட்டு பிரதேசத்தில் சில வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இப்பகுதியும் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. வீடுகள் அனைத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
நான் சட்டவிரோதமாக காணிகளை வழங்கியுள்ளதாக என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தப்படுகிறது. நான் எவருக்கும் ½ ஏக்கருக்கு கூடுதலான காணிகள் வழங்கவில்லை.
இதேவேளை 1938 ஆம் ஆண்டு வன பரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமானதென வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்ட கலாபோகஸ்வெவ எனும் பிரதேச காணிகளே காணிக் கச்சேரி நடத்தப்படாது எவ்வித சட்ட ஏற்பாடுகளுமின்றி தென் இலங்கை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு 5000 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட குடியேற்றமாகும். அங்கு இராணுவத்தினர் கூட காடழிப்புகளைச் செய்து மரங்களை வெட்டியுள்ளனர்.
வடமாகாணத்தில் சுமார் 40 பிரதேச செயலகங்களில் முசலி பிரதேச செயலகப் பிரிவிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டமாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அமைச்சர்களையும் சந்தித்து இது தொடர்பில் நியாயம் கோரவுள்ளேன். நியாயத்தின் பக்கமுள்ள சிங்களத் தலைவர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளேன்.
எமக்கு எதிலும் நியாயம் கிடைக்காவிட்டால் முஸ்லிம்கள் சார்பில் ஐ.நா. விடம் நீதி கோரவுள்ளேன்.
இதற்காக சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கிறேன்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தால் எமக்கு விடிவு கிடைக்கும், நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களை ஜனாதிபதி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகளுடன் ஜனாதிபதி கைகோர்த்திருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறான தேரர்களும் இனவாத சூழலியலாளர்களும் சில இனவாத ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி வருகின்றன.
முஸ்லிம்கள் ஒரு அங்குல நிலத்தைக் கூட அபகரிக்கவில்லை. ஒரு அங்குல நிலத்தில் கூட சட்டவிரோதமாகக் குடியேறவில்லை. ஜனாதிபதி எமக்கு துரோகம் செய்யமாட்டார் என்றிருந்த முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்றார்.