வில்பத்துவில் வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் குடியிருந்த காணிகளையே துப்புரவு செய்து குடியேறியுள்ளனர்.
பொதுபலசேனா அமைப்பும், சில சூழலியலாளர்களுமே வில்பத்து தேசியவனம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தவறாகப் பிரசாரம் செய்கிறார்காள். இதன் பின்னணியில் பொதுபலசேனா அமைப்பே செயற்படுகிறது என தேசிய சூழலியலாளர் அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் திலக் காரியவசம் தெரிவித்தார்.
சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டு உரையாற்றுகையிலேயே சூழலியலாளர் திலக் காரியவசம் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
இன்று வில்பத்து விவகாரம் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் தவறாகப் பிரசாரம் செய்யப்படுகிறது. முஸ்லிம்கள் வில்பத்து தேசிய வனத்தை அழிக்கிறார்கள்.
மரங்களை வெட்டுகிறார்கள், மிருகங்களைக் கொல்கிறார்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் பொய்ப் பிரசாரமாகும்.
முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணிகளையே துப்புரவு செய்து மீள் குடியேறியிருக்கிறார்கள். நாட்டின் தேசிய சொத்தான வனத்தை அழிக்க வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. இந்த உண்மை நிலையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக பெரும்பான்மை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
வில்பத்து விவகாரத்தை பின்னாலிருந்து இயக்கி பொதுபலசேனா அமைப்பு சுய இலாபம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது. இவ்வாறான முயற்சிகளினால் நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
கடந்த கால அரசாங்கத்தின் காலத்திலேயே பெருமளவு காடுகள் அரசியல் லாபத்துக்காக அழிக்கப்பட்டன. கலாபோகஸ்வெவ பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தென்னிலங்கை மக்களை அழைத்து வந்து குடியேற்றினார்கள். அக் குடியேற்றத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக் ஷவின் பெயரே சூட்டப்பட்டது.
அக் குடியேற்றம் ‘நாமல்கம’ என அழைக்கப்பட்டது. சுமார் 5000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. அக்காலத்தில் இன்றுள்ள சூழலியலாளர்கள் பெரிதாகக் கோஷமெழுப்பவில்லை.
இன்றும் அக் குடியேற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வில்பத்து பகுதியில் தங்களது பூர்வீகக் காணியில் குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக குரல் எழுப்பப்படுகிறது. இது இனவாத செயலாகும் என்றார்.